/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீயணைப்பு நிலையம் அமைக்க 30 கிராம மக்கள் கோரிக்கை தீயணைப்பு நிலையம் அமைக்க 30 கிராம மக்கள் கோரிக்கை
தீயணைப்பு நிலையம் அமைக்க 30 கிராம மக்கள் கோரிக்கை
தீயணைப்பு நிலையம் அமைக்க 30 கிராம மக்கள் கோரிக்கை
தீயணைப்பு நிலையம் அமைக்க 30 கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 04:58 AM
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடம் மற்றும் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது. இதனைச் சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, முருகன்குடி, மாளிகைக்கோட்டம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் மக்கள் அதிகளவில் கூரை வீடுகளில் வசிக்கின்றனர்.
கிராமங்களில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மழை பாதிப்பின்போது, மீட்புப் பணிகளுக்காக 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி, விருத்தாசலம் மற்றும் 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வர வேண்டும்.
ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் சேதம் அதிகமாகிறது. பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி கிராம மக்கள், சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர் ஆகியோருக்கு தனித்தனியே கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.
ஆனால் தீயணைப்பு நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ளவில்லை. தீ விபத்தால் அதிக சேதங்கள் ஏற்படுவது மட்டுமே இதுநாள் வரை தொடர்கிறது.
எனவே, பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க கலெக்டர், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.