Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி

போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி

போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி

போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி

ADDED : ஜூன் 26, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
கடலுார், : சரியான உளவியல் சிகிச்சையால் மட்டுமே போதை பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என, கடலுார் மைண்ட் கிளினிக் நிறுவனரும், மனநல மருத்துவருமான பார்த்திபன் கூறினார்.

அவர் கூறியதாவது:

உலக போதை பொருள் தடுப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எந்த ஒரு பொருள் மனிதனின் மூளை செயல்பாட்டை மாற்றி அதனை தொடர்ந்து பயன்படுத்தி இயல்பாக செயல்பட வைக்கிறதோ அவை அனைத்தும் போதை பொருள்.

உதாரணமாக அலர்ஜி மருந்து, வலி, துாக்க மாத்திரை தொடர்ந்து உட்கொள்வதும் ஒரு வித போதை பழக்கம்.போதை் பொருளுக்கு அடிமையாவது ஒரு மூளை சார்ந்த மாற்றங்களால் ஏற்படும். இது ஒரு மரபணு ரீதியாகவும், குண நலன், வளரும் சூழல், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றால் வரலாம்.

சமூகத்திலிருந்து பின்வாங்குதல், பசி, உடல் எடை குறைபடுதல், தினசரி வாழ்வின் நடவடிக்கையில் ஆர்வம் குறைவு, குறிப்பாக குடும்பம், தொழிலில் ஈடுபாடு குறைவு, பெரும்பாலும் போதை பற்றி சிந்தனை, கட்டுப்பாட்டை இழந்து குடிப்பது, போதை இல்லாத நேரத்தில் உடல் மற்றும் மனம் தடுமாறுதல், உடல் நலம் பாதித்தும் தொடர்ந்து போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகியவை போதை பழக்கத்தின் அறிகுறியாகும்.

போதைப் பழக்கத்தை உடனடியாக நிறுத்தக் கூடாது. படிப்படியாக கைவிட வேண்டும்.எப்போதாவது ஒருமுறை எடுத்துக் கொள்ளும் நபருக்கே இது சாத்தியமாகும். பெரும்பானோர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிரமம் இன்றி வெளியே வரலாம்.

உடல் ரீதியான மருத்துவ பரிசோதனை சிலருக்கு தேவைப்படலாம். குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தின் கொழுப்பு அளவு, கணைய அழற்சி, கல்லீரல் நோய், கால் நரம்பு செயல்பாடு பரிசோதனை, வலிப்பு நோய்க்கான ஸ்கேன் ஆகியவை தேவையான மருத்துவ பரிசோதனையாகும்.

மன அழுத்தம், மனப் பதற்றம், துாக்கமின்மை, குடி இல்லாத நேரத்தில் இரவில் காதில் யாரோ பேசுவது போல் உணருவது, இல்லாத உருவம் கண்களுக்கு தெரிவது போல் உணருவது போன்றவைக்கு அவசியம் சிகிச்சை தேவை.போதை உடலில் இருந்து வெளியேறும் போது மாற்று மருந்து கொடுப்பது. போதையின் மேல் வெறுப்பு வரும் மருந்து, அவர்சிவ் மருந்து கொடுப்பது சிகிச்சை முறையாகும்.நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வைட்டமின் B- காம்ப்ளெக்ஸ், மேக்னீசியம், ஒமேகா--3, வைட்டமின்-C போன்ற ஊட்டச்சத்து மருந்துகளை மருத்துவர் வழிகாட்டுதல்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை, தன்முனைப்பு மேம்படுத்துதல் சிகிச்சை, சமூகப் பழகுமுறை, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பயிற்சி, போதை எண்ணங்கள் தவிர்க்கும் பயிற்சி சிகிச்சைக்கு பின் ஆல்கஹால் அனானிமஸ் குழு பயிற்சி மூலம் மருந்துகள் உட்கொள்வது உளவியல் சிகிச்சையாகும்.

போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைப்பதால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாது.சரியான மற்றும் தகுதி வாய்ந்த உளவியல், மருத்துவ சிகிச்சை, குடும்ப நல ஆலோசனை கொடுத்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து முழுதுமாக குணமடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us