/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீராணம் ஏரி 5வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி; சம்பா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வீராணம் ஏரி 5வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி; சம்பா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்
வீராணம் ஏரி 5வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி; சம்பா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்
வீராணம் ஏரி 5வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி; சம்பா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்
வீராணம் ஏரி 5வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி; சம்பா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்
ADDED : செப் 16, 2025 06:37 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி, 15 வது நாளாக முழு கொள்ளளவில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியின் மூலமாக டெல்டா கடைமடையான, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில், வழக்கத்தை விட முன்கூட்டியே மழை பெய்ய துவங்கியதால், மேட்டூரில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஒரு மாதங்களாகவே உபரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் போதிய அளவு நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின், பானசத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணையில் தேக்கி, கீழணைக்கு திறந்து விடப்பட்டது. கீழணையில் இருந்து, கடந்த ஒரு மாதங்களாகவே வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு, தேவைக்கேற்ப தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக, எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 5வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து, தண்ணீர் வரத்து இருந்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல், நேற்று வரை ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு, முழுவதுமாக நிரம்பியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி கீழணையில் இருந்து, வடவாறு வழியாக, வீராணம் ஏரிக்கு, 624 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில், சென்னை குடிநீருக்கு 74 கன அடியும், பாசனத்திற்காக பல்வேறு வாய்க்கால்கள் மூலம் 402 கன அடியும், வி.என்.எஸ்.மதகு வழியாக 1,548 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
ஏரி முழு கொள்ளளவில் உள்ளதால் இந்த ஆண்டு, சம்பா பருவத்திற்கும், சென்னை குடிநீருக்கும் தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில் மழை காலம் துவங்கும் என்பதால் ஏரியில் இருந்து படிப்படியாக தண்ணீர் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.