Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உளுந்துக்கு காப்பீடு கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

உளுந்துக்கு காப்பீடு கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

உளுந்துக்கு காப்பீடு கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

உளுந்துக்கு காப்பீடு கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ADDED : பிப் 01, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
கடலுார்: உளுந்து பயிருக்கு காப்பீடு கிடைக்கவில்லை என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. நில எடுப்பு டி.ஆர்.ஓ., சிவருத்ரய்யா தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் கண்ணையா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

முருகானந்தம் (ஸ்ரீமுஷ்ணம்): ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஜிப்சம் தட்டுப்பாடு உள்ளது. நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலியபெருமாள் (புதுக்கூரைப்பேட்டை): எங்கள் பகுதியில் உளுந்து விளைச்சல் இல்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உளுந்துக்கு காப்பீடு வழங்க வேண்டும். விஜயமாநகரத்தில் கிடப்பில் உள்ள கால்நடை மருத்துவமனையை திறக்க வேண்டும்.

குப்புசாமி (கம்மாபுரம்): கம்மாபுரம் பகுதியில் முந்திரி விளைச்சல் குறைந்துள்ளது. எனவே முந்திரிக்கு பயிர் காப்பீடு செய்து தர வேண்டும். உளுந்து பயிருக்கு காப்பீடு செலுத்திய தொகை கிடைக்கவில்லை. பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கருத்தை வலியுறுத்தி, பல்வேறு விவசாயிகள் பேசினர்.

அழகுவேல் (மங்களூர்): மங்களூர் பகுதியில் மக்காச்சோளம் பயிர் செய்து விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அறவாழி (கடலுார்): குமளங்குளம் சாலை மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். உளுந்து பயிரை மான்கள் அழிப்பதை, வனத்துறையினர் தடுத்து தடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகள் வாக்குவாதம்

கூட்டத்திற்கு, கலெக்டர், டி.ஆர்.ஓ., வராததால், விவசாயிகள் எழுந்து, மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் இருந்து எங்களின் குறைகளை தெரிவிக்க வந்துள்ளோம். கலெக்டர் இல்லையென்றால் யாரிடம் புகார் கூறுவது என சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசின் திட்டத்தை தொடங்கி வைக்க, குறிஞ்சிப்பாடிக்கு கலெக்டர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us