Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்

விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்

விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்

விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்

UPDATED : அக் 20, 2025 09:51 PMADDED : அக் 20, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து நகர்ப்புற மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விருத்தாசலம் நகர எல்லைக்குள் மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு அச்சகம், வேளாண் அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையம், வணிக வரித்துறை, செராமிக் தொழிற்பேட்டை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு கருவூலம், அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும், திருச்சி - சென்னை மார்க்கத்தில், பிரதான ரயில் நிலையமாக இருப்பதால் கல்வி, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள்; மும்பை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு செல்ல வசதிகள் உள்ளது.

விருத்தாசலம் நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து 17.1.1970 முதல் வயலுார், நாச்சியார்பேட்டை, கண்டியங்குப்பம், மணலுார், பூதாமூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

கடந்த 1975-76ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், இதுநாள் வரை விருத்தாசலம் நகராட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாகவே உள்ளது.

மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறாதது என மக்கள் பிரச்னை நீள்கிறது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் போதிய நிதிவசதி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.

விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிப்பதால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். மக்களின் அடிப்படை வசதிகள், நிதி பிரச்னையின்றி தேவைகளை சுலபமாக தீர்த்து வைக்க முடியும்.

மாநில தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அங்கமான மறு வரையறை ஆணையம் மூலம் 33 வார்டுகளிலும் வாக்காளர்கள் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், வாக்காளர்களை 33 வார்டுகளுக்குள் பிரித்து வைக்கும் பணியே நடந்தது.

மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு

விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் உட்பட சுற்றியுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் மன்ற தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்த எந்த அறிவிப்பும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை.

தொடர் போராட்டங்கள்

தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க போராட்டக்குழு சார்பில் வழக்கறிஞர் தங்கதனவேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து உண்ணாவிரதம், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் என, போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

முதல்வர் வாக்குறுதி

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில், விருத்தாசலத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, பெட்டியில் பூட்டி எடுத்துச் சென்றார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தலைமை செயலகத்தில் என்னை நேரில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அந்தப் பெட்டியில், 50 சதவீத மனுக்கள், விருத்தாசலம் தனி மாவட்டம் கேட்டு கொடுக்கப்பட்டிருந்தன.

மேலும், சிறுமி சந்தனா என்பவர், முதல்வரிடம் தனி மாவட்டம் கேட்ட கோரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் தனி மாவட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் ஆய்வு

முந்தைய சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து, வேப்பூரை தனி பேரூராட்சியாக மாற்றுவது மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் அருகிலுள்ள கர்னத்தம், கோவிலானுார், பள்ளிப்பட்டு கிராமங்களையும், பெண்ணாடம் பேரூராட்சியில் பெ.பொன்னேரி ஊராட்சியை சேர்ப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனால் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், கானல் நீரானது.

'மாஜி.,க்கள்' - சிட்டிங் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் (1996 - 2001) துவங்கி, பா.ம.க., கோவிந்தசாமி, தே.மு.தி.க., விஜயகாந்த், தே.மு.தி.க., முத்துக்குமார், அ.தி.மு.க., கலைச்செல்வன், சிட்டிங் காங்., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., என பலர் சட்டசபையில் தனி மாவட்டம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேறவில்லை.

எனவே, விவசாயம், தொழில்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறைந்து வேலைவாய்ப்பு பெருகிட விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மீதமுள்ள ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவாரா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சாத்தியக்கூறுகள் உள்ளன

விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் இருந்து மாவட்ட தலைமையிடமான கடலுார் சென்று வர 60 முதல் 115 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஒரு நாள் பணியை விடுத்து, மூன்று பஸ்கள் மாறி பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். தனி மாவட்டம் அமைய அனைத்து வசதிகளும் விருத்தாசலத்தில் உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு அச்சகம், வேளாண்துறை அலுவலகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், வணிக வரித்துறை அலுவலகம், தொழிற்துறை சார்ந்த செராமிக் தொழிற்பேட்டை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு கருவூலம் என அனைத்து வசதிகளும் நகர எல்லைக்குள் உள்ளது. இதனால், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் போதுமான வசதியும் தன்னிறைவாகவே உள்ளது. இங்குள்ள செராமிக் தொழிற்பேட்டையில் இருந்து நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் பீங்கான் பொருட்கள், அகல் விளக்குகள் ஏற்றுமதியாகின்றன. விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக நாட்டின் பிற பகுதிகளுக்கு எளிதில் சென்று வர முடிகிறது. கல்வியில் பின்தங்கியுள்ள இப்பகுதி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்டமாக மாற்ற வேண்டும். மேலும், மக்கள் தொகை, வட்டங்களின் எண்ணிக்கை என அனைத்து சாத்தியக் கூறுகளும், விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்றிட தன்னிறைவாகவே உள்ளது. இதற்காக, இப்பகுதியில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு எந்தவித நிர்வாக பிரச்னையும் ஏற்படாது. -அகர்சந்த், தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், அனைத்து வர்த்தகம், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற சங்கங்களின் கூட்டமைப்பு. தனி மாவட்டம் உறுதி தி.மு.க., அரசு அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான தேவைகளை கேட்காமலேயே செய்து வருகிறது. விரைவில் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். ததனி மாவட்டமாக அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர், வடிகால் அமைப்பு எளிதாக விருதை நகருக்கு கிடைக்கும். அரசு மருத்துவமனை தரம்'' உயர்த்தப்பட்டு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்படும். அனைத்து வித உயர்தர சிகிச்சைகளும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும். 2,000 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் பெருமை சேர்க்கிறது. சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்களை போன்ற வடிவமைப்பை கொண்ட விருத்தகிரீஸ்வரர் கோவில் சுற்றுலா தளமாக அமையும். சாலை போக்குவரத்தில் விருத்தாசலம், வேப்பூர் மற்றும் உளுந்துார்பேட்டை பகுதிகள் மிக முக்கிய மையமாக உள்ளது. ரயில் போக்குவரத்தில் சென்னை - திருச்சி மார்க்கமாக அண்டை மாநிலங்களுக்கும், தமிழகம் முழுவதும் சென்று வர ஏதுவாக உள்ளது. மாவட்டமாக அறிவிக்கப்பட்டதும், புதிய அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றால் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மக்களின் தேவையை அமைச்சர் கணேசன் தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேற்றி வருகிறார். அதுபோல், தாயுமானவராக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நிச்சயமாக தனி மாவட்டமாக அறிவித்து, மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்கள். -டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி தலைவர். வாக்குறுதிகள் நிறைவேறவில்லை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை என ஆறு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதுபோல், புதிய மாவட்டங்களுக்கு தேவையான நிதியுதவியை கொடுத்து, கட்டமைப்புகள், தேவைகளை நிறைவேற்றியவர் பழனிசாமி. வாக்குறுதி கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் மக்களின் தேவைகளை உணர்ந்து உடனடியாக நிறைவேற்றியது அ.தி.மு.க., ஆட்சியில் தான். ஆனால், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தின்போது விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வெற்று வாக்குறுதியை கொடுத்துவிட்டு, இதுநாள் வரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார் ஸ்டாலின். விடியா தி.மு.க., ஆட்சியில் அரசு தேர்தலுக்கான அறிவிப்புகளை மட்டுமே கொடுத்து, மக்களிடம் ஓட்டு வாங்கும் செயலை மட்டுமே செய்கிறது. என்.எல்.சி.,யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்.எல்.சி., நிர்வாக பிரச்னைகளை தீர்த்து வைத்தார். இதனால்தான், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் உருட்டுக்கடை அல்வா என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தலில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. விருத்தாசலம் பிரசாரத்தில் தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஒரு சிறுமி கோரிக்கை விடுத்தார். அவரிடம் உடனடியாக நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, நான்கரை ஆண்டுகளாகியும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வரும் தேர்தலில் பழனிசாமி முதல்வரானதும், விருத்தாசலத்தை கட்டாயம் தனி மாவட்டமாக அறிவித்து, அதற்குரிய கட்டமைப்புகள், நிதியுதவியை நிறைவேற்றித் தருவார். -அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., (அ.தி.மு.க) அடிப்படை வசதிகள் கிடைக்கும் விருத்தாசலம் தனி மாவட்டம் என்பது ஒரு கானல் நீராகவே மாறிவிட்டது. ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டம், 9 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மாவட்டம். அலுவலக ரீதியாக இந்த மாவட்டத்தை சுற்றி 250 கி.மீ., சதுர பரப்பு கொண்டது. எனவே, நிர்வாக ரீதியாக கடலுார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாச்சலம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. விவசாயமே பிரதான தொழிலாக இருந்தாலும், கனமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடரால் தொடர்ச்சியாக பாதிக்கும் மாவட்டமாக உள்ளது. கடல் சார்ந்த மாவட்டமாகவும், முந்திரி, பலா போன்ற முக்கிய பணப்பயிர்கள் விளைகின்ற பூமியாக இருப்பதால் கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகள் மட்டுமே ஓரளவு தொழில் வளம், வியாபார ரீதியாக முன்னேற்றம் பெற்றுள்ளது. ஆனால், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, விருத்தாசலம் போன்ற பகுதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஒரு அவசரகால மருத்துவம் கூட முறையான, தரம் வாய்ந்த மருத்துவமனைகள் இல்லாது 70 முதல் 120 கி.மீ., தொலைவில் உள்ள கடலுார், பெரம்பலுார், விழுப்புரம், திருச்சி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிப்பதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உயர்ந்து, வேலை வாய்ப்புகள் பெருகும். விவசாயம் மேலோங்கி, அலுவலக ரீதியாக பணிச்சுமையும் குறையும். எனவே, தீபாவளி நாளில் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், புதிய மாவட்டம் என்ற அறிவிப்பு கிடைக்கும் நம்பிக்கையில் பொது மக்கள் காத்திருக்கின்றனர். -மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர், பா.ஜ., தி.மு.க. வெற்றி வாகை சூடும் விருத்தாசலத்தை முதல்வர் ஸ்டாலின், விரைவில் தனி மாவட்டமாக அறிவிப்பார். அனைவருக்குமான அரசு மக்களின் தேவைகளை நேரடியாக களமாடி நிறைவேற்றி தருகிறது. இந்தியாவில் எந்த முதல்வரும் யோசிக்காத மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மாற்றுக் கட்சி தொண்டர்களும் தி.மு.க., அரசை பாராட்டி வருகின்றனர். விருத்தாசலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால், தற்போதைய செல்வராஜ் என்ற பெயரில் உள்ள பஸ் நிலையம் இடபற்றாக்குறைாக உள்ளது. விரைவில் புதிய மாவட்டமாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் முயற்சியால் அறிவிக்கப்பட்டதும், பிரமாண்டமான அனைத்து வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்படும். மாணவிகள் நலன் கருதி அரசு மகளிர் கல்லுாரி, தொழில்நுட்பக் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என அனைத்தும் துவங்கப்படும். விருத்தாசலம் தன்னிறைவான பகுதியாக தி.மு.க., ஆட்சியில் மாற்றப்படும். இதுபோன்ற திட்டங்களால் 2026 தேர்தலில் விருத்தாசலம் உட்பட 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி வாகை சூடும். - கணேஷ்குமார், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us