கிணற்றில் விழுந்த மான் உயிரிழப்பு
கிணற்றில் விழுந்த மான் உயிரிழப்பு
கிணற்றில் விழுந்த மான் உயிரிழப்பு
ADDED : ஜூன் 15, 2024 07:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி காப்புக்காட்டு பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண் மான் உணவு தேடி, காட்டை விட்டு விவசாய தோட்ட பகுதிக்கு வந்தது. அப்போது, நாய்கள் துரத்தியதால் சத்தியமூர்த்தி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது. இதை யாரும் பார்க்காததால் மான் உயிரிழந்தது. நேற்று முன்தினம், இது குறித்து சத்தியமூர்த்தி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
மொரப்பூர் ரேஞ்சர் ஆனந்த குமார் உத்தரவின்படி, வனவர் செந்தில் குமார், வனகாப்பாளர்கள் ஸ்ரீராம், முனியாண்டி ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன், கிணற்றில் விழுந்த மானை அழுகிய நிலையில் மீட்டனர். பின், புட்டிரெட்டிப்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் மானை டாக்டர் சரவணராஜன் பிரேத பரிசோதனை செய்தார். பின் காப்புக்காட்டில் வனத்துறையினர் மானை புதைத்தனர்.