Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! ஆள் குறைப்பு, மாற்றுப் பணியால் முடங்கும் கொசு ஒழிப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! ஆள் குறைப்பு, மாற்றுப் பணியால் முடங்கும் கொசு ஒழிப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! ஆள் குறைப்பு, மாற்றுப் பணியால் முடங்கும் கொசு ஒழிப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! ஆள் குறைப்பு, மாற்றுப் பணியால் முடங்கும் கொசு ஒழிப்பு

ADDED : ஆக 02, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் நகர் பகுதி மட்டுமின்றி குக்கிராமங்களிலும் விரிவாக்க பகுதிகளால் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது சுகாதாரம் சார்ந்த செயல்களில் இதற்கேற்ப கூடுதல் கவனம் செலுத்தப்படுவது இல்லை.

குடிநீர் பம்பிங் பகுதி, மேல்நிலை, தரைநிலை தொட்டிகள் பராமரிப்பு, தண்ணீர் வினியோக பைப்லைன், கேட்-வால்வு போன்றவற்றை பராமரிப்பதில் கடைநிலை ஊழியர் முதல் உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வரை அனைவரும் பொறுப்பை தட்டிக்கழிப்பவர்களாக உள்ளனர்.

இவற்றில் ஏற்படும் நீர் கசிவு மூலம் தண்ணீர் வீணாகி வினியோக பாதிப்பு, தட்டுப்பாடு பிரச்னைகளை ஏற்படுத்த தவறுவதில்லை.

அதே வேளையில் கேட் வால்வு, பராமரிப்பற்ற தண்ணீர் தொட்டி உட்பட பல இடங்கள், கொசு உற்பத்தி மையமாக மாறுகின்றன. தொற்று பரவலால் விதவிதமான வைரஸ்கள் அறிமுகமாகி பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன.

கொசுத்தொல்லை அதிகரிப்பு, இவற்றின் பரவலுக்கு முக்கிய காரணியாகும். இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய் பரவலையும் பாதிப்புகளையும் வெகுவாக குறைக்க முடியும்.

நோய் கண்காணிப்பிற்கான குறைந்த எண்ணிக்கையிலான மஸ்துார் பணியாளர்களை மேலும் குறைப்பது, துாய்மை காவலர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்துவது போன்றவற்றின் மூலம் இவற்றில் பாதிப்பு அதிகரித்தல் வாடிக்கையாகி விட்டது. நோய் கண்காணிப்பு, அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு ஆய்வு செய்வது தண்ணீர் தேங்காத சூழலை கண்காணித்தல், கொசுப்புழு ஒழிப்புக்கான அபேட், குளோரினேஷன் தெளிப்பு போன்ற பணிகளை கண்காணிப்பதில் பெரும் பின்னடைவு உள்ளது.

கொசுப்புழு அதிகரிப்பை தடுப்பதில் , போதிய கவனம் செலுத்துவதில்லை. கொசுவாக மாறிய பின் அதனை அழிப்பது சிரமம். முட்டை வளர்ச்சி நிலையிலே அழிப்பது மட்டுமே அதிகரிப்பை தடுக்கும்.

முட்டையிட்டு முழு வளர்ச்சிக்கு 7 நாட்களாகும் என்ற அடிப்படையில் 6 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும்.சில இடங்களில் பணியாளர் எண்ணிக்கையை பெயரளவில் மட்டுமே அதிகரித்து மாற்று பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

இது தவிர சுகாதார சூழல் பராமரிப்பிற்கான துாய்மை காவலர்களை, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

இதன் மூலம் கொசு உற்பத்தி, தொற்று பரவல் வழிகள் அதிகரித்து பலர் பாதிப்படையும் அவலமும் தொடர்கிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இப்பணியாளர்களின் எண்ணிக்கை வரம்பை அதிகரிக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us