Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு

இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு

இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு

இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு

ADDED : மார் 16, 2025 01:27 AM


Google News
இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு

ஈரோடு:தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி: கரும்பு உற்பத்தி அதிகரிக்க ஆண்டுக்கு, 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியும், இன்று வரை 353 என்ற கரும்பு ரகமே பயிரிடப்படுகிறது. கரும்பு மட்டுமின்றி வேறு எந்த பயிருக்கும் வேறு ரகத்தை வேளாண் பல்கலை கழகம் அறிவிக்கவில்லை. கரும்புக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை, 349 ரூபாயை உயர்த்தவில்லை. ஆனால், 3,500 ரூபாய் வழங்குவதாக நாடகமாடுகிறது. நெல்லுக்கு மாநில அரசு, 1 ரூபாய் மட்டுமே தருகிறது; உயர்த்தவில்லை. பாரம்பரிய நெல் கொள்முதலுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. 'தமிழ் மண் நிலம்' என்ற திட்டத்தில் மண் பரிசோதனைக்கு, 100 கோடி ஒதுக்கி முழுமை பெறவில்லை. புதிய திட்டம், அறிவிப்பு ஏதுமின்றி ஏமாற்றம் தந்த பட்ஜெட்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் முனுசாமி: அணைக்கட்டு, 17 ஆற்றுப்பாசனம், 42,000 ஏரி, குளம், குட்டை துார்வார திட்டமும், நிதியும் ஒதுக்கவில்லை. தனியார் பயிர் காப்பீடு திட்டத்தை மாற்றி, அரசு காப்பீடு திட்ட அறிவிப்பு இல்லை. ஆவின் நிறுவன மேம்பாடு, அவற்றின் கடனை அடைத்தல், கறவை மாடு வளர்ப்போரை ஊக்கப்படுத்துதல், ஆவினுக்கு வழங்கிய பாலுக்கான நிலுவை தொகை மற்றும் கொள்முதல் விலை குறைப்பால் ஏற்பட்ட, 1,000 கோடி இழப்புக்கு நிதி வழங்க அறிவிப்பு இல்லை. அதிக நெல் விளைச்சல் கொண்ட டெல்டா மாவட்டத்துக்கு வேளாண் பல்கலை கழகம், ஆராய்ச்சி மையம் போன்ற அறிவிப்பு இல்லை.

ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விற்பனை பற்றி கூறவில்லை. வனப்பகுதி, வனத்தை ஒட்டிய பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கான தடை நீக்காதது ஏமாற்றம்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி: நெல், கரும்பு, மரவள்ளி என எந்த பயிருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பில்லை. ஏற்கனவே உள்ள திட்டத்துக்கு நிதி தந்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர இடம் அறிவித்தது பயன் தரும். கால்வாய் துார்வாருவது ஏற்கனவே உள்ள திட்டம்தான். விவசாயிகளுக்கு நேரடி பலன் ஏதுமில்லை. கால்வாய், ஏரி, குளம், நதி மூலமான பாசன சீரமைப்புக்கு திட்டமில்லை.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு: 130 இயந்திர வேளாண் வாடகை மையங்கள் ஏற்படுத்துதல், சோலார் பம்புகள் வழங்கும் திட்டம், இயற்கை வேளாண் சந்தையை ஊக்குவிக்கும் திட்டத்தை வரவேற்கலாம்.

மஞ்சள், மரவள்ளி கிழங்குக்கு தனி வாரியம் அமைக்கும் அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஏற்கனவே அறிவித்த மஞ்சள் ஏற்றுமதி மையம், மஞ்சள் ஆராய்ச்சி மையத்தில் எந்த செயல்பாடும் இல்லை.

தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி: மொத்தம், 36,400 கோடி ரூபாய் வேளாண் பட்ஜெட்டில், 7,200 கோடி ரூபாய் இலவச மின்சாரத்துக்கு செல்கிறது.

மற்றவை பிரித்து பிரித்து கூறி உள்ளனர். டாஸ்மாக் மது மூலம், 50,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வருகிறது. அதற்கான மூலப்பொருள் விவசாயிகள் வழங்கும் கரும்பில்தான்

வருகிறது. ஆனாலும், கள் விடுதலை அறிவிப்பு இல்லை. தேர்தலை முன்னிட்டு வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளனர். விவசாயம், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு ஏதுமில்லை. விளைநிலங்கள் குறைந்து வருவதை மாற்றி, விளை நிலங்களை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை. இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us