ADDED : ஜூன் 10, 2024 01:30 AM
காங்கேயம் இன மாடுகள்
ரூ.7 லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 33 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 54 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 16 கால்நடைகள் ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் பூ வியாபாரி பலி
பவானி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்தவர் பாவாயி, 65; கோனேரிப்பட்டி பிரிவில் பூ வியாபாரம் செய்து வந்தார். கோனேரிப்பட்டி பிரிவிலிருந்து எதிரில் உள்ள டீக்கடைக்கு செல்ல, பவானி-மேட்டூர் ரோட்டை நேற்று காலை கடந்தார். அப்போது, பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற பைக் மோதியது. பலத்த காயமடைந்த பாவாயி, பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நசியனுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கனகாம்பரம்
கிலோ ரூ.1,360
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ கனகாம்பரம் பூ, 1360 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை 880 முல்லை,340, செண்டுமல்லி,115, கோழிகொண்டை,140, சம்பங்கி,50, அரளி,50, துளசி,40, செவ்வந்தி,300 ரூபாய்க்கும் ஏலம் போனது.