ADDED : பிப் 02, 2024 10:16 AM
மீன் வளர்ப்பு குறித்து
விவசாயிகளுக்கு பயிற்சி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பாலக்கரையில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.
பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் பிரசாத் தலைமை வகித்தார். மீன் வள ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறை, மண்ணின் தன்மை, குளத்தின் அமைப்பு, பராமரிப்பு, மீனின் ரகங்கள், துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
உதவி வேளாண் அலுவலர் ரவிசந்திரன், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு, இதர விவசாயிகளுக்கு மானிய விபரங்களை பற்றியும், பி.எம்.கிசான் திட்டம் பற்றியும் விளக்கினார்.
உதவி வேளாண் அலுவலர் மதன்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் விசுவநாதன், தாமோதரன் போன்றோர் இ-நாம், உழவன் செயலி போன்ற திட்டங்களை விளக்கினர்.
பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு தேர்வு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில், மாற்றுத்திறன் கொண்ட தலா, 300 மாணவ, மாணவிகள் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தேர்வு துறையினர் கூறியதாவது: பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தலா, 300 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் ஸ்கிரைப் மூலம் எழுத விண்ணப்பித்து இருந்தனர். கற்றல் குறைபாடுள்ள மாணவ, மாணவிகள், கண் பார்வையற்றோர், உடல் ஊனம் உள்ள மாணவ, மாணவிகளை அரசு டாக்டர்கள் குழு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
டாக்டர்கள் குழு அளிக்கும் தகுதி சான்றிதழ்படி மூன்று தேர்வுக்கும் தலா, 300 மாணவ, மாணவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் வினாக்களுக்கு அளிக்கும் விடையை அதாவது மாணவர்கள் சொல்வதை கேட்டு ஆசிரியர்கள் தேர்வு எழுதுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடைகளுக்கு வாடகைசெலுத்த அறிவுறுத்தல்
ஈரோடு, கொங்கலம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு விரைவில் வாடகை செலுத்த வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 46 கடைகள் உள்ளன. கடைகளின் வாடகைதாரர்களை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, பணியாளர்கள் நேரில் சந்தித்து, வாடகையை செலுத்துமாறு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், வாடகைதாரர்கள் தொகையை செலுத்த அலட்சியம் காட்டுவதால், அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பேனரை, கோவில் நிர்வாகம் பொது இடங்களில் வைத்துள்ளது. மேலும், வாடகைதாரர்கள் தங்களது நிலுவை தொகையை உடனே செலுத்தி, வெளியேற்று நடவடிக்கையை தவிர்த்து கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இரு பஸ்கள் மோதல்22 பேர் படுகாயம்
ஈரோட்டில் இரு பஸ்கள் மோதிய விபத்தில், 22 பேர் காயமடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து, கரூர் வழியாக ப.வேலுார் செல்லும் எம்.பி. என்ற தனியார் பஸ், சோலார் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே நேற்று மாலை, 4:38 மணிக்கு சென்று கொண்டிருந்தது. வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார், 31. பஸ்சை இயக்கினார். வேடசந்துார் கவுண்டன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 42. கண்டக்டராக இருந்தார். நடுப்பாளையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி அரசு டவுன் பஸ் எண்.15 வந்து கொண்டிருந்தது. பஸ்சை மூலப்பாளையம் அருண் குமார், 33. ஓட்டினார். ஈரோடு குமரன் நகர் ராஜசேகரன், 49. கண்டக்டராக இருந்தார். சோலார் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே சென்று போது, அரசு பஸ் முன்புற டயர் வெடித்து நிலைதடுமாறி, எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் பயணிகள் அலறினர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காயமடைந்த, 22 பேர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பு.புளியம்பட்டியில்
ரூ.1 கோடிக்கு
கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தையில், ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனையானது.
புன்செய்புளியம்பட்டியில் புதன், வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தை கூடுகிறது. கர்நாடகா உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஜெர்சி மாடு, 20 ஆயிரம் முதல், 48 ஆயிரம் ரூபாய், சிந்து, 28 ஆயிரம் முதல், 55 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 35 ஆயிரம் முதல், 72 ஆயிரம் ரூபாய், எருமை, 22 ஆயிரம் முதல், 36 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. வளர்ப்பு கன்று, 6,000 முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநில வியாபாரிகளும், கால்நடைகளை வாங்கிச் சென்றனர். மொத்தம், 700க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனையானதில், ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பண்ணாரி அம்மன் கோவிலில்366 கிராம் தங்கம் காணிக்கை
பண்ணாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில், பக்தர்கள் காணிக்கையாக, 97 லட்சத்து, 77 ஆயிரத்து 982 ரூபாய் செலுத்தியிருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.
இதில் 97 லட்சத்து, 77 ஆயிரத்து, 982 ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 366 கிராம் தங்கம், 798 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
பெண் மர்ம சாவா?
போலீசார் விசாரணை
டி.என்.பாளையம், ஒண்டி முனியப்பன் கோவில் அருகில் உள்ள அரக்கன் கோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வயல் ஓரத்தில், பாலமரம் ஒன்றில் அடையாளம் தெரியாத 35--40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று சேலையால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடப்பதாக பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று போலீசார், அருகில் இருந்தோர் உதவியுடன் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாரேனும் கொலை செய்து தொங்க விட்டனரா என்ற கோணத்தில், பங்களாப்புதுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊராளி மக்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
பழங்குடி ஊராளி மக்கள் சங்க பொது நிர்வாககுழு தேர்தல், 5 ஆண்டுக்கு பிறகு நேற்று கடம்பூரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் என 750 பேர் ஓட்டுகளை பதிவு செய்தனர். பின்பு மக்கள் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தலைவராக அரிகியம் வேல்முருகன், 630 ஓட்டுகள் பெற்றார். துணைத் தலைவராக மாக்கம்பாளையம் பசுவராஜ், 400 ஓட்டுகள் பெற்றார். பொருளாளராக அரிகியம் மாதப்பன், 550 ஓட்டுகள் பெற்றார். செயலாளராக அணைக்கரை மசணி, 600 ஓட்டுகள் பெற்றார். துணை செயலாளராக மாதம்மாள், 470 ஓட்டுகள் பெற்றார்.
பரண் மைய மேலாண் இயக்குனர் பிலிப், துணை இயக்குனர் உதயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு
தாராபுரம் பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பா.ஜ., நகர தலைவர் சதீஷ் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோர் ஒப்புதலுடன், தாராபுரம் நகர இளைஞரணி பொதுச் செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், சுபாஷ், பொருளாளராக சந்துரு, நகர துணைத் தலைவராக ரமேஷ் யோகி, செயலாளராக வினோத் ஆகியோர் செயல்படுவர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி
தாராபுரத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று காலை துவங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது, தலைக்கவசம் அணிதல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்ஸ்பெக்டருக்கு
பிரிவுபசார விழா
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக முருகேசன் பணியாற்றி வந்தார். தற்போது சேலத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மக்களோடு இணக்கமாக பணியாற்றியது, 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு அறையை தொடங்கி வைத்தது போன்ற பணிகளில் ஈடுபட்டார். இதனால் கணிசமான அளவு குற்றங்கள் குறைந்தது.
பணியிட மாறுதலில் செல்லும் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தினர். சத்தி டி.எஸ்.பி.,சரவணன், அனைத்து கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர் பங்கேற்று, அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
மல்லிகை கிலோ
ரூ.1,220க்கு ஏலம்
சத்தியமங்கலம், பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,220 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 1,060, காக்கடா, 200, ஜாதி முல்லை, 750, செண்டுமல்லி, 23, கோழிகொண்டை, 67, சம்பங்கி, 30, அரளி, 90, துளசி, 40, செவ்வந்தி, 100 ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.74 ஆயிரத்துக்குதேங்காய் பருப்பு ஏலம்
தாளவாடி, ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. மொத்தம், 20 மூட்டைகள் வரத்தானது. அதிகபட்சமாக பருப்பு கிலோவிற்கு, 84.16 ரூபாய், குறைபட்சமாக, 72 ரூபாய், சராசரியாக, 78.08 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9.96 குவிண்டால் தேங்காய் பருப்பு, 74 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கோபியில், 7,570 வாழைத்தார்ரூ.8.92 லட்சத்துக்கு வியாபாரம்
கோபி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 7,570 வாழைத்தார்கள், 8.92 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரன், 20 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 400, தேன்வாழை, 480, செவ்வாழை, 700, ரஸ்தாளி, 390, ரொபஸ்டா, 290, மொந்தன், 200, பச்சைநாடான், 260 ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 7,570 வாழைத்தார்கள், 8.92 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு பேரணிபவானி உட்கோட்ட காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழாவையொட்டி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியை டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார், பவானி இன்ஸ்பெக்டர் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை தெற்கு மாவட்டதி.மு.க., செயற்குழு கூட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மணல்மேட்டில் உள்ள, தி.மு.க., மாவட்ட கட்சி அலுவலகத்தில் நாளை (பிப்.,3) காலை, 10:00 மணிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ் தலைமை வகிக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி, ஈரோட்டுக்கு வரும், 8 ல் வருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே, அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஊர்க்காவல் படையில்
சேர அழைப்பு
ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், 6, பெண், 3 என மொத்தம், 9 பணியிடங்களை நிரப்ப, 20 வயதுக்கு மேற்பட்ட, 45 வயதுக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, இன்று மற்றும் நாளை விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் பெற்று கொள்ளலாம்.
இத்தகவலை, ஈரோடு எஸ்.பி., ஜவகர் தெரிவித்துள்ளார்.
6 ஆடுகள் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அடுத்த, கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 65, கூலித்தொழிலாளி. இவர் மனைவி துளசியுடன் தென்னங்கீற்று, தகரத்தினால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.
இவர்களது வீட்டிலிருந்து புகை வந்தது. சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, பொருட்கள், ஆட்டு பட்டியிலிருந்த ஆறு வெள்ளாடுகள் தீயில் கருகி இறந்தது. பின்பு, எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபியில் வளர்ச்சி திட்டப்பணி'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கோபியில் இரண்டாவது நாளாக, வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி கோபி, புதுச்சாமி கோவில் வீதியில், காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். காந்தி நகர் முதல் குறுக்கு வீதியில் குப்பை சேகரிப்பு பணி, கோபி பஸ் ஸ்டாண்டு அருகே இயங்கும் ஆவின் பாலகம், கரட்டடிபாளையத்தில் பால் கொள்முதல் நிலையம், கோபி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது. கோபி தாசில்தார் உத்திரசாமி, கோபி நகராட்சி கமிஷனர் சசிகலா உட்பட பலர் உடனிருந்தனர்.
கள்ளிப்பட்டியில் திடீர் மழை
கள்ளிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக பனிமூட்டம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று காலை, 4:30 முதல் 5:00 மணி வரை அரை மணி நேரம் திடீரென மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


