சாக்கடை கால்வாயில் பிரின்டிங் கழிவு
சாக்கடை கால்வாயில் பிரின்டிங் கழிவு
சாக்கடை கால்வாயில் பிரின்டிங் கழிவு
ADDED : பிப் 12, 2024 11:04 AM
திருப்பூர் நகரப்பகுதியில், சாய ஆலைகளுக்கு போட்டியாக, வீடுகளில் மறைமுகமாக இயங்கி வந்த சாயப்பட்டறைகள் கடும் சவாலாக இருந்தன. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அதிரடி நடவடிக்கையால், வீடுகளில் முறைகேடாக சாய பட்டறைகள், 'சாம்பிள் விஞ்ச்' இயக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.
இருப்பினும், பிரின்டிங் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதும், 'பட்டன், ஜிப்' ஆலைகளில் இருந்து, சாக்கடை கால்வாயில் கழிவுநீரை திறப்பதும் நின்றபாடில்லை.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக்கண் பாலம், லட்சுமி நகர் மந்திரி வாய்க்கால், ஜம்மனை பள்ளம் பாலம் போன்ற பகுதிகளில், அடிக்கடி கலர் கலராக சாயக்கழிவு செல்வது குறையவில்லை.
செவந்தாம்பாளையம் மணிகண்டன் பகுதியில் நேற்று, சாக்கடை கால்வாயில், வெளிர் சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு சென்றது; பிரின்டிங் ஆலைகளை சுத்தம் செய்து வெளியேற்றப்
படுவதால், அடிக்கடி இவ்வாறு சாயம் கலந்த கழிவுநீர் வெளியேறுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும்படை, புகார்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் போது, புகார் அளிக்கலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அப்பகுதியினர் கூறுகையில், ''பிரின்டிங் ஆலைகளில், அதிக அளவு தண்ணீர் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், 'இங்க்' எடுத்து வரும் கொள்கலன்களை கழுவி சுத்தம் செய்கின்றனர். சில நேரங்களில்
மெஷின்களை சுத்தம் செய்யும் போது, பிரின்டிங் கழிவும் சாக்கடையில் வெளியேறுகிறது. இதன் காரணமாகத்தான், நல்லாற்றை இதுவரை துாய்மையாக மாற்ற இயலவில்லை. மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்படு வாரியத்துடன் கலந்தாய்வு செய்து, உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''
என்றனர்.