/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம்... அறிவுறுத்தல் ; பருவ மழை துவங்குவதால் எச்சரிக்கை மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம்... அறிவுறுத்தல் ; பருவ மழை துவங்குவதால் எச்சரிக்கை
மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம்... அறிவுறுத்தல் ; பருவ மழை துவங்குவதால் எச்சரிக்கை
மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம்... அறிவுறுத்தல் ; பருவ மழை துவங்குவதால் எச்சரிக்கை
மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம்... அறிவுறுத்தல் ; பருவ மழை துவங்குவதால் எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2024 12:15 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மின்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் பலத்த காற்று, வெள்ளம் போன்ற நிலைகளின் போது மின் கசிவு காரணமாக ஏற்படும் மின் விபத்துக்களால் சிலர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல் பல இடங்களில் கால்நடைகளும் மின் விபத்துகளில் சிக்கி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனையொட்டி மின் கசிவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மின்வாரிய துறை செயற்பொறியாளர் கணேசன் கூறியிருப்பதாவது; பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ள காலத்தினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க மின் துறை சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகிவயற்றில் தரமான ஒயரிங் பொருட்களை உபயோகித்து, முறையாக நில இணைப்பு(எர்த்) கொடுக்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு 'எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்' பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல் மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மற்றும் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை மற்றும் கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த கூடாது. மின் கம்பங்கள், அவற்றை தாங்கும் மின் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்தால் அருகே செல்வதை தவிர்த்து, உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்த வேண்டும். இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.
அதேபோல் இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் மொபைல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் அருகே செல்ல கூடாது.
விவசாய நிலங்களில் பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மின் வேலி அமைப்பது தொடர்பாக புகார் வந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரேனும் மின்வேலி அமைத்திருந்தால், அது தொடர்பாக உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்பாதை அடியிலோ அல்லது அருகிலோ மின் கம்பிகளை தொடும்படி மரம் செடி கொடிகளை வளர்க்க வேண்டாம். மின் கம்பங்கள் பழுது மற்றும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதுபற்றி 94987 94987 என்ற மின்னக எண்ணில் மூலம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.