Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மரவள்ளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை! ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

மரவள்ளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை! ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

மரவள்ளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை! ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

மரவள்ளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை! ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

ADDED : அக் 14, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
கச்சிராயபாளையம்; மரவள்ளி கிழங்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, மக்காசோளம் போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர்.

மரவள்ளி பயிர்கள் கொல்லிமலை, கல்வராயன்மலை, தாளவாடி மலை போன்ற மலை பாங்கான இடங்களில் அதிகளவில் விளைகிறது. குறிப்பாக கல்வராயன்மலையில் மரவள்ளி பயிரை விவசாயிகள் மானாவாரி முறையில் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

இங்கு தாய்லாந்து, மான்கொம்பு, குங்குமரோஸ் போன்ற மரவள்ளி ரகங்கள் நடவு செய்கின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன்மலையில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் ஆத்துார், தலைவாசல், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் தனியார் சேகோ ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

இ ங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளில் உள்ள மாவு சத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 கிலோ மரவள்ளி கிழங்கை எடுத்து, அதிலுள்ள மாவு சத்தின் அளவை கொண்டு பாயின்ட் முறையில் விலை நிர்ணயம் செய்யபடுகிறது.

கிழங்கில் மாவு சத்தின் அளவு 28 பாயின்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு 73 கிலோ கொண்ட 1 மூட்டை மரவள்ளி கிழங்கு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

அதனை நம்பி இந்த ஆண்டு கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலை பகுதிகளில் மரவள்ளி கிழங்கை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்தனர். ஆனால், இந்த ஆண்டு மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக குறைந்துள்ளது.

தற்போது 73 கிலோ கொண்ட மூட்டை ஒன்றின் விலை ரூ 400 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 டன் மரவள்ளி 14 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது 1 டன் 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் சாகுபடி செய்த மரவள்ளி கிழங்கிற்கு தனியார் சேகோ ஆலைகள் நிர்ணயித்துள்ள விலை, பயிர் நடவு முதல் அறுவடை வரை செய்த செலவு தொகைக்கு கூட ஈடு செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மரவள்ளி கிழங்கின் விலை நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

கல்வராயன்மலையில் சாகுபடி செய்யும் மரவள்ளி கிழங்குகளை தனியார் ஆலைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றன. இதனால் தனியார் ஆலை நிர்வாகமே விலையை நிர்ணயம் செய்யும் நிலை உள்ளதால் ஆலை உரிமையாளர்கள், இடைதரகர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதனால், மரவள்ளி டன் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை வைத்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

மரவள்ளி கிழங்கிற்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் மரவள்ளி கொள்முதல் நிலையம், சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us