Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கச்சிராயபாளையம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடியில்... புதிய முயற்சி: கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

கச்சிராயபாளையம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடியில்... புதிய முயற்சி: கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

கச்சிராயபாளையம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடியில்... புதிய முயற்சி: கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

கச்சிராயபாளையம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடியில்... புதிய முயற்சி: கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

ADDED : செப் 25, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் புதிய முயற்சியாக வெட்டி வேர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களுமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இப்பகுதியில் நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை, கொய்யா, பப்பாளி போன்ற பழ வகைகளும் கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் போன்று பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இருப்பினும், பெரும்பகுதி விவசாயிகள் நெல், மக்காசோளம், கரும்பு ஆகியவற்றையே பிரதான பயிராக சாகுபடி செய்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் புதிய முயற்சியாக பைகளில் (குரோபேக்) முறையில் வெட்டிவேர் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெட்டி வேர் பொதுவாக மணற்பாங்கான பகுதிகளில் மட்டும் வளரும் தன்மை கொண்டது. இதனால் கடலோர பகுதிகளில் மட்டுமே வெட்டி வேரை சாகுபடி செய்து வந்தனர். தற்போது நவீன முறையில் பி.வி.சி., பைப் மற்றும் குரோபேக் ஆகியவற்றில் மலைப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெட்டி வேர் சாகுபடி செய்யப்படுகிறது.

வெட்டிவேர் பைகளில் (குரோபேக்) சாகுபடி செய்வதற்கு குறைந்த அளவு இடம் மற்றும் தண்ணீர் போதுமானதாக உள்ளது. மேலும் குறைந்த செலவில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் வெட்டி வேர் சாகுபடியில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெட்டி வேர் சாகுபடி குறைந்த அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. குறிப்பாக 10 சென்ட் இடத்தில் 1000 பைகளில் வெட்டி வேர் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 10 ஆயிரம் பைகளில் வெட்டி சாகுபடி செய்யப்படுகிறது.

குரோபேக், நாற்று, உரம், மணல் என ஒரு பையில் வெட்டி வேர் சாகுபடி செய்ய 150 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதற்கு தெளிப்பு நீர் பாசன முறையே ஏற்றது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

வெட்டிவேர்களில் பல வகைகள் உள்ளது. கடற்கரை பகுதிகளில் நேரடியாக மண்ணில் சாகுபடி செய்யப்படும் வெட்டி வேர் சர்பத், அழகு சாதன பொருட்கள், மாலை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

குரோபேக் முறையில் சாகுபடி செய்யப்படும் வேர்கள் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. வெட்டி வேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் மருத்துவம் மற்றும் வாசனை திரவியங்கள் (பர்பியூம்) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. வெட்டி வேரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் வெளி சந்தைகளில் வெட்டிவேருக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் அறுவடை செய்யப்படும் வேர்களை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களே விவசாயிகளுக்கு வெட்டி வேர் சாகுபடிக்கு தேவையான பைகள், நாற்று, மணல், உரம், ஆகியவைகளை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு சாகுபடி குறித்து பயிற்சியும் அளிக்கின்றனர்.

மேலும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவைகள் வேளாண் உதவியாளர்களை வைத்து அறுவடை செய்யும் காலம் வரை தொடர்ந்து கண்காணித்து விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதனால் வெட்டி வேர் சாகுபடியில் முன் அனுபவம் இல்லாத விவசாயிகளும் பயன்பெறுகின்றனர்.

வெட்டி வேர் 10 முதல் 12 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. ஒரு பையில் சராசரியாக 2 முதல் 3 கிலோ வெட்டி வேர் கிடைக்கிறது. ஒரு கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு குரோபேக்கில் சராசரியாக கிடைக்கும் 2.5 கிலோ வெட்டி வேர் மூலம் 375 ரூபாய் வருமானமாக கிடைக்ககும்.

இதில் சாகுபடி செலவு 150 ரூபாய் போக ஒரு பையில் 225 ரூபாய் கிடைப்பதால் வெட்டி வேர் சாகுபடியில் கூடுதல் வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். குறைந்த இடம் மற்றும் குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைப்பதால் தற்போது கச்சிராயபாளயம் பகுதி விவசாயிகள் புதிய முயற்சியாக வெட்டி வேர் சாகுபடி செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us