Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது?: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது?: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது?: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது?: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஜூன் 14, 2024 07:04 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார், நகராட்சி அந்தஸ்தை பெற்று விட்டாலும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பறந்து விரிந்த நான்கு மாட வீதிகளைக் கொண்ட நகரில், குறிப்பாக, வடக்கு வீதி, தெற்கு வீதி, சன்னதி வீதிகளில் ஆக்கிரமிப்புகள் 15 அடி துாரம் வரை நீண்டு விட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனால், நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக முகூர்த்த நாட்களில் கிழக்கு வீதி, வடக்கு வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்.

சாலையை அடைத்து வைக்கப்பட்டுள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம் என்றால், சாலையின் நடுவே பூக்கடை, தள்ளுவண்டி, பழக்கடைகளின் ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்த போலீசார் முன்வருவதில்லை.

இதன் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன ஓட்டிகள் திருக்கோவிலுார் நகரில் நுழையவே அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் திக்கித் திணறி செல்கின்றனர்.

நிரந்தர ஆக்கிரமிப்பை நில அளவையர்களைக் கொண்டு அளவீடு செய்து வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், காவல் துறை உதவியுடன் நேர்மையான, அதிரடி நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும்.

மேலும் பார்க்கிங் வசதியின்றி இயங்கும் கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை அரசியல் தலையீடு இன்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், சாலையோரம் இயங்கும் தள்ளுவண்டி, பழக்கடை, பூக்கடைகளுக்கு மாற்று இடம் வழங்கி ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us