Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முடியனுர்- கழுமரத்துக்கு இடையே தடுப்பணை... கட்டப்படுமா? கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

முடியனுர்- கழுமரத்துக்கு இடையே தடுப்பணை... கட்டப்படுமா? கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

முடியனுர்- கழுமரத்துக்கு இடையே தடுப்பணை... கட்டப்படுமா? கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

முடியனுர்- கழுமரத்துக்கு இடையே தடுப்பணை... கட்டப்படுமா? கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : செப் 24, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் குடிநீர் தேவையை மேம்படுத்தும் நோக்கில் முடியனுர் - கழுமரத்துக்கு இடையே தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்லாயிரக்கணக்கான கனஅடி நீர் பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது. இதனை முறையாக பயன்படுத்தி கொள்ள ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெரும் பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக தென்பெண்ணையாறு உள்ளது. குறிப்பாக மணலுார்பேட்டையில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம், முடியனுர் கூட்டு குடிநீர் திட்டம் என பல கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கூவனுார், கடுவனுார் உள்ளிட்ட 19 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 17.99 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற கூட்டு குடிநீர் திட்டங்களால் தென்பெண்ணையாறு பருவ மழை காலத்தில் மட்டுமே தண்ணீர் செல்லும் நதியாக மாறிவிட்டது. கடும் வறட்சி நிலவும் காலங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் முடங்கும் அபாயம் கூட ஏற்பட்டு விடுகிறது. ஆற்றில் கிணறு அமைத்து அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுவதே இதற்குக் காரணம். எனவே நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவது அவசியம்.

நீர் மேலாண்மையை சம நிலையில் வைத்துக் கொண்டால் மட்டுமே விவசாயமும், மக்களும் செழிப்புடன் இருக்க முடியும். எனவே கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு இணையாக தடுப்பணைகளையும் உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

அந்த வகையில் முடியனுருக்கும், கழுமரத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மட்டுமின்றி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு தடுப்பணை அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆண்டு முழுவதும் குடிநீர் வழங்கும் அமுதசுரபியாக மாறும்.

தடுப்பணை ஏற்படுத்தினால் அதிலிருந்து திருப்பப்படும் தண்ணீர் வடமலையனுார், கொடியூர், வீரணாம்பட்டு, பெண்ணைவளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 25க் கும் மேற்பட்ட ஏரி பாசன விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து முப்போக சாகுபடி மேற்கொள்ள முடியும்.

எனவே முடியனுர் - கழுமரம் இடையிலான தடுப்பணை அமைக்கும் கோரிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி, அதிக பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கான நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதற்கு தடுப்பணை அமைய ஏற்ற இடம் எது என்பதை தேர்வு செய்து நடப்பு நிதியாண்டிலேயே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ரூ. 75 கோடியில் தடுப்பணை

சமீபத்தில் தமிழக அரசு மணலுார்பேட்டையில் 75 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என அரசாணையை வெளியிட்டது. தடுப்பணை எந்த இடத்தில் அமையும் என்பது தெளிவாக அதில் கூறப்படவில்லை. இதன் மூலம் முடியனுர் - கழுமரம் இடையே தடுப்பணையை உருவாக்கினால் விவசாயம் மட்டுமின்றி, கூட்டு குடிநீர் திட்டங்களும் பயன்பெறும் என்பதால், நீர்வளத்துறை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us