Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சட்டவிரோதமாக பேனர்களுக்கு அனுமதி பெற காய் நகர்த்தல்! கவனம் ஈர்க்கும் ராட்சத பேனர்களால் அச்சம்

சட்டவிரோதமாக பேனர்களுக்கு அனுமதி பெற காய் நகர்த்தல்! கவனம் ஈர்க்கும் ராட்சத பேனர்களால் அச்சம்

சட்டவிரோதமாக பேனர்களுக்கு அனுமதி பெற காய் நகர்த்தல்! கவனம் ஈர்க்கும் ராட்சத பேனர்களால் அச்சம்

சட்டவிரோதமாக பேனர்களுக்கு அனுமதி பெற காய் நகர்த்தல்! கவனம் ஈர்க்கும் ராட்சத பேனர்களால் அச்சம்

ADDED : ஜூன் 10, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
சென்னையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி பெற, இடைத்தரகர்கள் வாயிலாக 'பேரம்' பேசப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்குள், 200க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகளுக்கு அனுமதி பெற முயற்சி நடந்து வருகிறது.

தமிழகத்தில், பொது இடங்கள் மற்றும் தனிநபர் கட்டடங்களில், அனுமதியின்றி விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்க தடை உள்ளது.

சாலையின் அகலம் மற்றும் அமைக்கப்பட உள்ள இடத்தின் அகலத்தைப் பொறுத்து, விளம்பர பலகைகள், பதாகைகளுக்கான அனுமதி அளிக்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக, 40 அடி அகலம் - 20 அடி உயரத்தில் அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான விளம்பர பதாகைகள், சாலையின் அகலம் மற்றும் இடத்தின் அகலத்தை மீறி அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 841 விளம்பர பதாகைகளுக்கு அனுமதி பெற, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட்டிருந்தால், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி அளிக்கலாம் என, நீதிமன்றம் அறிவுறுத்தியது.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

பெரும்பாலான விளம்பர பதாகைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டும், பாதுகாப்பு அம்சங்களுடனும் அமைக்கப்படவில்லை. இதனால் சென்னை மாநகராட்சி, முறைப்படியான அனுமதி கடிதத்தை இதுவரை விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கவில்லை.

இதையடுத்து, அனைத்து விளம்பர பதாகைகளுக்கும் இடைத்தரகர்கள் வாயிலாக அனுமதி பெற, காய்நகர்த்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்களை சரிக்கட்ட, இடைத்தரகர்கள் விளம்பர நிறுவனங்களிடமிருந்து, 20 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் வாயிலாக, வரும் ஜூலை மாதத்திற்குள், 200க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு மாநகராட்சி விதிகளை மதிக்காமல் அனுமதி வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சாலையோரங்களில், கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு, இதுபோல விதிகளை மதிக்காமல் அனுமதி வழங்கினால், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்க, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதியில் இடம் உள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், அனுமதி வழங்கப்படும்.

அதேநேரம், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றப்படும். இதுவரை, எந்த விளம்பர பதாகைகள், பலகைகளுக்கும் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

அனைத்தும் சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி கமிஷனர் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டால் அதிகாரிகள், கமிஷனரின் உத்தரவை மதிப்பதில்லை.

மக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்தாலும், விளம்பர நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த பகுதி மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜெ.சதீஷ்,

நிறுவனர், அகில இந்திய பாதசாரி பயனாளிகள் அறக்கட்டளை.

மாநகராட்சிக்கு வருவாய் இல்லை

விளம்பரப் பதாகைகள், பலகைகள் அமைப்பதன் வாயிலாக, மாநகராட்சிக்கு பெரிய அளவிலான வருவாய் கிடைக்கப் போவதில்லை. ஆண்டுக்கு, 6,000 ரூபாய் மட்டுமே அனுமதி கட்டணம் கிடைக்கும். அதேநேரம், அந்த விளம்பரப் பதாகைகள், பலகைகளால், யாரோ ஒரு தனிநபர் பயனடைய உள்ளார். தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய பேருந்து தட சாலைகளில் ராட்சத விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள விளம்பரங்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுபோன்ற நிலை, சென்னையிலும் ஏற்படலாம். விளம்பர பதாகைகளால் உயிரிழந்தால், அக்குடும்பத்திற்கு 10 கோடி ரூபாய் தர வேண்டும் என, விளம்பர நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us