ADDED : ஜூன் 10, 2024 05:04 AM
காஞ்சிபுரம், : மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி, 30, மூன்று மாத கர்ப்பிணி. இவர், மொளச்சூர் பகுதியில், எம்ராய்டிங் வேலை செய்து வந்தார். கடந்த, 6ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மொளச்சூர் கால்வாய் ஒன்றில், அழுகிய நிலையில் இளம் பெண் உடலை, சுங்குவார்சத்திரம் போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தேவி என, தெரிய வந்தது. போலீசார் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் கூறியதாவது:
இறந்த பெண்ணுக்கும், எதிர் வீட்டைச் சேர்ந்த ரவி, 30, என்பவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
மாயமானதாகக் கூறப்படும் அன்றைய தினம், தேவி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவதற்கு, மொளச்சூர் பஜாரில் காத்திருந்தார். அப்போது, தேவியின் கள்ளக்காதலன் ரவி, இருசக்கர வாகனத்தில் வரும்படி தேவியை அழைத்துள்ளார்.
என்னுடன், என் கணவர்வந்திருப்பதாகக் கூறி தேவி மறுத்துள்ளார். கோபம் அடைந்த கள்ளக்காதலன் ரவி, தேவியை அடித்துள்ளார். இதில், மயக்கமடைந்தவரை கால்வாயில் தள்ளிவிட்டு, அவர் சென்றுவிட்டார்.
அன்றைய தினம், மழை பெய்ததால் இந்த சம்பவம் குறித்து, அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை. 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படை விசாரணையில், ரவிதான் என, தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து, விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.