Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி

போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி

போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி

போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி

ADDED : பிப் 10, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
சென்னை:வார இறுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்வோருக்கு போதுமான பேருந்துகள் இல்லாததாலும், கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு பேருந்துகள் பற்றாக்குறையாலும் இரண்டாவது நாளாக நேற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அவதியடைந்தனர்.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வர போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாதது, உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தாதது குறித்து, பயணியர் புலம்பி வருகின்றனர்.

வார இறுதியில் தென்மாவட்ட பயணியர் வசதி கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணியர், போதிய பேருந்துகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், பேருந்து நிலையத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து முடக்கம்


அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் திடீரென பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், பயணியருடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

சொந்த ஊர் செல்ல வந்தோர், போதிய பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலைய நடைமேடையில் இரவு முழுதும் உறங்கி, அதிகாலையில் பேருந்து பிடித்து சென்றனர்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில் இருந்து, ஏற்கனவே திட்டமிட்டப்படி அரசு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், மதுராந்தகம் அருகே, நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட விபத்தால் 2 கி.மீ., துாரம் வாகன போக்குவரத்து முடங்கியது.

வாக்குவாதம்


கிளாம்பாக்கம் வர வேண்டிய பேருந்துகள், அந்த நெரிசலில் சிக்கி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 488 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர, தினமும் இயக்கப்படும் 1,161 அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

நேற்று முன்தினம், வார இறுதி நாட்கள் என்பதால், இரவு 10:30 மணிக்கு மேல், அதிகமான பயணியர் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் பயணியர்வந்ததால், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருக்கைகளை சேதப்படுத்தினர்.

அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணிபுரிவதற்கு அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் நடந்த சம்பவத்திலும் பாடம் கற்காத அதிகாரிகளால், போதிய பேருந்துகள் கிடைக்காமல்நேற்றும் பயணியர் அவதியடைந்தனர்.

குறிப்பாக, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம், திருச்சி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், 700க்கும் மேற்பட்ட பயணியர் அவதியடைந்தனர்.

நள்ளிரவு வரை நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருந்தனர். மீண்டும் மறியல் போன்ற போராட்டங்களை தடுக்கும் வகையில், நேற்று 80க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கம் செல்வதே அவதி: பழனிசாமி குற்றச்சாட்டு


கிளாம்பாக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கருணாநிதி பேருந்து நிலையம் என 'ஸ்டிக்கர்' ஒட்டி, அவசரகதியில், தி.மு.க., அரசு திறந்தது. சென்னைவாசிகளை, அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதையே பெரும் சிரமமாக கருத வைத்துவிட்டது தி.மு.க., அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் மாநகர பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும், உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்


சென்னை கோயம்பேடு, எழும்பூர்உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றவும், இறக்கவும் ஆம்னி பேருந்துகளுக்கு, கடந்த மாதம் 24ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், கோயம்பேடு, போரூர், சூரப்பட்டு பகுதிகளில் பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு இடைக்கால அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், நேற்று முதல் கோயம்பேடில் பணிமனையில் இருந்து வழக்கம்போல், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தும் வரை, கோயம்பேடில்இருந்து புறப்பட்டு, போரூர், சூரப்பட்டு வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், பல ஆயிரக்கணக்கான பயணியர், 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் நேற்று பயணம் செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.



மக்கள் போராட்டம் வெடிக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை




கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து 40 நாட்களாகியும், பயணியர் எதிர்கொள்ளும் பிரச்னை தினமும் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல, போதிய பேருந்துகளை இயக்காததால், நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளை சிறைபிடித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்தி, தங்கள் நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில், தி.மு.க., அரசு ஈடுபட வேண்டும். மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் அவர்களின் போராட்டம், சென்னை முழுக்க பெருமளவில் வெடிக்கும்.

--அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்


சென்னை கோயம்பேடு, எழும்பூர்உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றவும், இறக்கவும் ஆம்னி பேருந்துகளுக்கு, கடந்த மாதம் 24ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், கோயம்பேடு, போரூர், சூரப்பட்டு பகுதிகளில் பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு இடைக்கால அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், நேற்று முதல் கோயம்பேடில் பணிமனையில் இருந்து வழக்கம்போல், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தும் வரை, கோயம்பேடில்இருந்து புறப்பட்டு, போரூர், சூரப்பட்டு வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், பல ஆயிரக்கணக்கான பயணியர், 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் நேற்று பயணம் செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us