Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்' திட்டத்திற்கு...கைவிரிப்பு!:இடம், நிதி ஒதுக்கீடு கேட்டும் அரசு தொடர் மவுனம்

காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்' திட்டத்திற்கு...கைவிரிப்பு!:இடம், நிதி ஒதுக்கீடு கேட்டும் அரசு தொடர் மவுனம்

காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்' திட்டத்திற்கு...கைவிரிப்பு!:இடம், நிதி ஒதுக்கீடு கேட்டும் அரசு தொடர் மவுனம்

காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்' திட்டத்திற்கு...கைவிரிப்பு!:இடம், நிதி ஒதுக்கீடு கேட்டும் அரசு தொடர் மவுனம்

ADDED : ஜூலை 26, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு வரும், வெளியூர் கார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்கும் திட்டம் பற்றி இரு ஆண்டுகளுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமாக நகரின் மத்தியில், 2 ஏக்கர் வரை இடமில்லாதது, அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இல்லாதது போன்ற காரணங்களால், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் போயுள்ளது.

தமிழகத்தில், முக்கிய கோவில் நகரமும், பட்டு சேலைக்கான உற்பத்தி நகரமாகவும் காஞ்சிபுரம் விளங்குகிறது.

ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் என முக்கிய கோவில்கள் உள்ளதால், வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அதிக நெரிசல்

அதேபோல, கைத்தறியில் நெய்த பட்டு சேலைகளை வாங்க, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தென்தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கார்களில் வந்து செல்கின்றனர்.

கோவில் மற்றும் பட்டு சேலை போன்ற காரணங்களுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு காரணங்களுக்காகவும் நாள்தோறும் பலர் காஞ்சிபுரம் நகருக்கு வருகின்றனர்.

வெளியூர்வாசிகள் கொண்டு வரும் கார்களை நிறுத்த போதிய இடமில்லாமல், சாலையிலேயே நிறுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக காந்தி ரோட்டில் உள்ள பட்டு சேலை கடைகளுக்கு ஏராளமானோர் வருவதால், காந்தி ரோட்டிலேயே அதிக நெரிசல் ஏற்படுகிறது. நாள் முழுதும் கோவிலை சுற்றி வாகனங்கள் நின்றுள்ளன.

கோவில்களுக்கு வருவோரும், சுற்றியுள்ள மாடவீதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவதால், சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களால் எளிதாக சென்றுவர முடியவில்லை.

இதுபோன்ற காரணங்களால், காஞ்சிபுரம் நகரில் 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்க, அரசு ஆலோசித்தது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்க, முன்னாள் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நகரில் 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்கத் தேவையான 6 - 7 ஏக்கர் இடம் உள்ளதா என பார்க்கப்பட்டது.

பின், குறைந்தபட்சம் 2 ஏக்கர் இடமாவது மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளதா ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், நகரின் மத்தியில், மாநகராட்சிக்கு சொந்தமாக 2 ஏக்கர் இடம் இல்லாததால், இத்திட்டம் செயல்படுத்த முடியாமல் போயுள்ளது.

எதிர்ப்பு


இதனால், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடம் ஒன்றில், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

அவ்வாறு, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் உள்ள கோவில் இடத்தில், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோவில் இடத்தில் கார் பார்க்கிங் கொண்டு வரக்கூடாது என, 2022ல் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே முடங்கிப் போனதால், அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டம் அல்லது ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஆலோசனை கூட்டம் என, எந்த நடவடிக்கைகளும் இன்றி முடங்கியது.

இத்திட்டத்திற்கு, அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு வழங்காததால், திட்டம் கைவிடப்பட்டது தெளிவாகியுள்ளது.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதால், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அது பற்றி பேச இருக்கிறோம். இத்திட்டம் பற்றி அதிகாரிகள் அடுத்தகட்டமாக பேசுவார்கள். உயர்மட்ட அளவில் பேசி தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

புதிய திட்டங்கள்


காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி, கருத்துருவாக எழுதி கொடுப்பது வழக்கம். அதில், பாதாள சாக்கடை, குடிநீர், மஞ்சள்நீர் கால்வாய் உள்ளிட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குகிறது.

சில திட்டங்களுக்கு உலக வங்கி வாயிலாக நிதி கிடைக்கிறது. ஆனால், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' திட்டம் சம்பந்தமாக, அரசிடம் இருந்து தகவல் வரவில்லை.

நிதி ஒதுக்கீடு அடிப்படையிலேயே எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு அரசிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் நகரவாசிகள் கூறியதாவது:


காஞ்சிபுரம் நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, போதிய நடவடிக்கை எடுக்காததால், அன்றாடம் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.காந்தி ரோட்டின் ஒரு பகுதியை பார்க்கிங் ஆக மாற்றி, வாகனங்களை நிறுத்தினார்கள். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்காத காரணத்தால், பழையபடி வாகனங்கள் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
கோவில் இடங்களில் பார்க்கிங் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவும் பலன் அளிக்காமல் போனதால், மீண்டும் சாலையோரங்களிலேயே வாகனங்கள் நிற்கின்றன.போலீஸ் உயரதிகாரிகளும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சில முயற்சிகளை எடுத்தனர். ஆனால், இன்று வரை நெரிசலுக்கு சரியான தீர்வை உயரதிகாரிகளால் எட்ட முடியவில்லை. கீரைமண்டபம், மேட்டுத்தெரு, விளக்கடி கோவில் தெரு, காந்தி ரோடு போன்ற இடங்களில் நெரிசலை குறைத்தால் பாதி பிரச்னை தீர்க்க முடியும்.இவ்வாறு நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us