ADDED : மே 11, 2025 11:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், குரு பரிகார ஸ்தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. ஆதி குருவாக விளங்கும், மூலவர் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்,
நேற்று மதியம், ரிஷிப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ச்சியானார். இந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
புதுப்பாக்கம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத கண்டீஸ்வரர் கோவில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம். அதை தொடர்ந்து தீபாரதனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.
* காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், திருக்கல்யாண திருக்கோலத்துடன் அருள்பாலிக்கும் தாரை சமேத குருபகவான் சன்னிதியில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
இதில், நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதி தேவதைகள், வள்ளி தேவ சேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வரர், ராகு கேது உள்ளிட்ட சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம், தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 27 நட்சத்திர பரிகார சாந்தி ஹோமம், மதியம் 12.00 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ கலச அபிஷேக அலங்காரம் நடந்தது.
மதியம் 12.50 மணிக்கு குரு பெயர்ச்சி மஹாதீப ஆராதனை, சுவாமி பிரசாதம் வினியோகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், முடங்கு வீதியில் உள்ள காயோகணீஸ்வர் குரு கோவிலில் நேற்று, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இன்று, பிற்பகல் 12:00 மணிக்கு குரு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், வரும் 15ம் தேதி ஊஞ்சல் உத்சவமும் நடக்கிறது.