/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
ADDED : ஜூலை 02, 2025 12:42 AM

சென்னை:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய ஏதுவாக, சாய்தள பாதை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாத்தாதேசிகர் திருவம்சத்தார் சபை மற்றும் அதன் செயலர் சம்பத் குமரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மிகவும் பழமையானது. இக்கோவிலில் ஆகம விதிகளுக்கு மாறாக, கோவிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவில் கருவறை, வெளி பிரகாரம் இடையில் நடைமேம்பாலம், கருவறை செல்லும் புனிதமான ஆறு படிகளின் எண்ணிக்கை 10 ஆகவும், கோவில் மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு பக்கத்தில், கச்சிவாய்த்தான் மண்டபத்திற்கு அருகில் உள்ள தங்க பல்லியை பக்தர்கள் தடையின்றி தரிசக்க, சாய்தளம் அமைக்கவும், ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
பக்தர்களின் உணர்வுகள், அடிப்படை உரிமைகள் மற்றும் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது. கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் தொடர்பாக, கடந்த 15ல் கோரிக்கை மனு அளித்தேன். அதற்கு உரிய பதில் இல்லை. தினமும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
எனவே, ஆகம விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளும் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் செயல் அறங்காவலர் தரப்பில் வழக்கறிஞர் கே.வி.பாபு ஆஜராகி வாதிட்டதாவது:
பழமையான கோவிலுக்கு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
முதியவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் நலனுக்காக, கருவறைக்கு செல்லும் பாதையில் தற்காலிக சாய்வுதள பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதையில், தற்போது எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.
பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாகவும், அவசர காலங்களில் பக்தர்கள் எளிதில் வெளியேறவும் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.
ஆகம விதிகளுக்கு உட்பட்டே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதுப்பித்தல், கட்டுமானங்களின் போது, சன்னிதி, தெய்வங்கள், சுவரோவியங்கள் ஆகியவற்றுக்கு, எவ்வித இடையூறும், பாதிப்பும் ஏற்படாது. இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் மேற்கொள்ளப்படும்.
கட்டுமானப் பணிகள் கோவிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் இருக்காது. இவை ஆகம விதிகளுக்கு எதிரானதல்ல.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதி, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலின் கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்தார்.