Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் கட்டடங்களுக்கான வரி விதிப்பில்... முறைகேடு:மாநகராட்சிக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு

காஞ்சியில் கட்டடங்களுக்கான வரி விதிப்பில்... முறைகேடு:மாநகராட்சிக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு

காஞ்சியில் கட்டடங்களுக்கான வரி விதிப்பில்... முறைகேடு:மாநகராட்சிக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு

காஞ்சியில் கட்டடங்களுக்கான வரி விதிப்பில்... முறைகேடு:மாநகராட்சிக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு

ADDED : செப் 17, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் கட்டடங்களுக்கான வரி விதிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதன் மூலம் மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் கட்டணம், காலி மனை வரி உட்பட ஏழு வகை வரிகள், நகர மக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 35 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த வரிகளை வசூலிப்பதிலும் மாநகராட்சி ஊழியர்கள் காட்டும் சுணக்கத்தால், ஆண்டுதோறும் வருவாய் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.

அதேசமயம், வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, கட்டட அளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்படாதது, வணிக கட்டடங்களை குடியிருப்பு கட்டடங்களாகவும், கட்டடங்கள் உள்ள இடத்தை காலி மனைகளாகவும் கணக்கு காட்டி வரியை குறைத்து செலுத்துதல் போன்ற முறைகேடுகளில் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை, மாநகராட்சி வரி வசூலிக்கும் அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.

ஜி.எஸ்.டி., வரி, வருமான வரி, தொழில் உரிமம் போன்றவை செலுத்தும் வியாபாரிகள் பலரும், தங்கள் வணிக கட்டடங்களை குடியிருப்பு கட்டடங்களாக வரி செலுத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, காமராஜர் சாலை, ராஜ வீதிகள் என, நகரின் முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதல் தர வகைப்பாட்டில் உள்ள காந்தி சாலை போன்ற பகுதிகளில் உள்ள கட்டடங்கள்கூட, சில நுாறு ரூபாய் மட்டுமே சொத்து வரி கட்டி வருவது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காந்தி சாலையில் உள்ள பல வணிக கட்டடங்கள் குடியிருப்பு கட்டடங்களாக இன்றைக்கும் செயல்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகளில் உள்ள வணிக கட்டடங்களை ஆராய்ந்து வரி விதிப்பு செய்தாலே, பல கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, காலி மனைகள் பலவும் கட்டடங்களாக மாறியும் அதற்கேற்ப வரி வசூலிக்கப்படவில்லை. காலி மனை வரி செலுத்தும் இடங்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

வரி இனங்களை கண்டறிந்து, சரியான வரி விதிக்காத காரணத்தாலேயே வருவாய் குறைந்து, மாநகராட்சியால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

கண்டும் காணாமல் இது குறித்து, கவுன் சிலர்கள் கூறியதாவது:

மாநகராட்சி கூட்டத்தில் நாங்கள் தொடர்ந்து வரி விதிப்பு குளறுபடிகளை ஆய்வு செய்யும்படி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மாநகராட்சியின் வரி வசூலிப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், வணிக, குடியிருப்பு கட்டடங்கள், வகை மாற்றி வரி குறைத்து கட்டுவது பற்றி தெரிந்தும், தங்கள் சுய லாபத்திற்காக கண்டும் காணாமல் உள்ளனர்.

இத்தகைய வரி ஏய்ப்பு மூலமாக, 50 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நாங்கள் எந்த கோரிக்கை விடுத்தாலும், நிதி இல்லை என்கின்றனர். ஆனால், வரி ஏய்ப்பை சரி செய்யாமல், பல கோடி ரூபாயை அதிகாரிகள் கோட்டை விடுகின்றனர்.

மாநகராட்சி முழுதும் குடியிருப்பு வகை கட்டடங்களையும், வணிக கட்டடங்களையும் மறு ஆய்வு செய்து, சரியான வரி விதிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு செய்து நடவடிக்கை

கமிஷனர் உறுதி



காஞ்சிபுரம் நகருக்குள் உள்ள கட்டடங்கள் மீதான வரி விதிப்பில் குளறுபடி நடப்பது பற்றி, தி.மு.க., கவுன்சிலர்கள் கார்த்தி, கயல்விழி ஆகியோர், கடந்த 15ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த வருவாய் துறை உதவி கமிஷனர் வண்ணமலர், ''நகரின் பல கட்டடங்களுக்கு தொடர்ந்து வரி விதிப்பில் ஈடுபடுகிறோம்.

வரி விதிப்பில் வராத கட்டடங்கள் பற்றி தெரிவிக்கும்படி, வரி வசூலிப்பாளர்ளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். நாங்கள் ஆய்வு செய்து, வரி விதித்து வருகிறோம்,'' என்றார். மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விடுபட்ட கட்டடங்கள் மீதான வரி விதிப்பு பற்றி ஆய்வு செய்து, முறையான வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி விதிக்கப்பட்டு, மாநகராட்சி எடுத்த நடவடிக்கை குறித்த விபரங்கள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us