Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'டிட்வா' புயலால் காஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடு, வயல், சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி

'டிட்வா' புயலால் காஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடு, வயல், சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி

'டிட்வா' புயலால் காஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடு, வயல், சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி

'டிட்வா' புயலால் காஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடு, வயல், சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி

UPDATED : டிச 04, 2025 02:24 PMADDED : டிச 04, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் வெளுத்து வாங்கிய மழையால், குடியிருப்புகள் மற்றும் பயிரிட்ட நிலங்களில் மழைநீர் சூழ்ந்தும், சாலைகள் சகதியாகவும் மாறியதால், பல தரப்பு மக்கள் அவதிப்பட்டனர்.'டிட்வா' புயலால் மூன்று நாட்களாக மழை பெய்துவந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெளுத்து வாங்கியது. இதனால், ஆறு, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள் ளது.

தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுதும், மூன்று வீடுகள், ஆறு கால்நடைகள், 270 கோழிகள் இறந்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், மழைநீர் தேங்கி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழையால், ஆனந்தாபேட்டை சாலையில், குட்டை போல தேங்கிய மழைநீர், சகதியாக மாறியது.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் எதிரில், காந்தி சாலை மாநகராட்சி துவக்கப்பள்ளி பின்புறம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் கால்வாயில் முறைகேடாக விடப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கியது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி மின் நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கியது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், 5 எச்.பி., ஆயில் இன்ஜின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

இப்பகுதியில் மழைநீர் வெளியேற வடிகால் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, காஞ்சிபுரம் ரயில்வே சாலை - அசோக் நகர் இடையே உள்ள ரயில்வே இருப்பு பாதையின் கீழ், மினி சுரங்கப்பாதையில், தேங்கிய மழை நீர், சகதி நீராக மாறியுள்ளதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

வாலாஜாபாத் வாலாஜாபாத் அடுத்த, காவாந்தண்டலம் கிராமத்தில் ஆறு, ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். கடந்த நவரை பருவ அறுவடையை தொடர்ந்து சம்பா பட்டத்திற்கு இப்பகுதி விவசாயிகள், ஆழ்த்துளை கிணற்று பாசனம் வாயிலாக நேரடி நெல் விதைப்பு மூலம் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர்.

அப்பயிர்கள் தற்போது ஒரு மாத பயிராக நன்கு வளர்ந்திருந்தது. இந்நிலையில், மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக, இப்பகுதி நீர்நிலைகளில் இருந்து மழைநீர் வடிந்து நெல் பயிரிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி அப்பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

உத்திரமேரூர் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் இருந்து, கரும்பாக்கம் செல்லும் இணைப்பு சாலையை பயன்படுத்தி பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர், களியப்பேட்டை, சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராம வாசிகள் வாலாஜாபாத், சாலவாக்கம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அரும்புலியூரில் இருந்து, கரும்பாக்கம் நோக்கி செல்லும் இச்சாலையில், மழை காலங்களில் அரும்புலியூர் விவசாய நிலங்களில் இருந்து வழியும் தண்ணீர் அங்குள்ள தாழ்வான பகுதியின் சாலை வழியாக வெளியேறுகிறது. இதனால், தண்ணீரில் சாலை மூழ்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒரகடம் ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுதும் கன மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதியை சூழந்தது.

குன்றத்துார் ஒன்றியம், மாடம்பாக்கம் ஊராட்சியில், 8வது வார்டுக்குட்பட்ட வள்ளலார் நகர், ஸ்டாலின் 1 மற்றும் 2வது தெருவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளில், நேற்று முன்தினம் பெய்த கன மழையினால், மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து நின்றது.

இதனால், இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். இயல்பு வாழ்க்கை முடங்கியது.

விவசாயிகளுக்கு அறிவுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13,585 ஏக்கர் நிலம் சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மழையால், நெல் நாற்று நடவு செய்த வயல் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளன. இந்த தண்ணீரை வெளியேற்றாமல் விவசாயிகள் விட்டால், வேர் அழுகல் ஏற்பட்டு நாற்று இறக்க நேரிடும். இதை தவிர்க்க, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி கூறியதாவது: வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரை, பயிர் தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு, மீத தண்ணீரை தத்துமடை வழியாக வெளியேற்றலாம். மேலும், வேளாண் துறை வல்லுனர்கள் கூறும் அறிவுரை படி வயலில் தண்ணீர் வடிந்த பின் உரங்களை வயலுக்கு இடலாம். இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் குழு -:





      Our Apps Available On




      Dinamalar

      Follow us