/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாலாற்றின் குறுக்கே வெங்குடியில் தடுப்பணைக்கு.ரூ.70 கோடி: நீர்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு பாலாற்றின் குறுக்கே வெங்குடியில் தடுப்பணைக்கு.ரூ.70 கோடி: நீர்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு
பாலாற்றின் குறுக்கே வெங்குடியில் தடுப்பணைக்கு.ரூ.70 கோடி: நீர்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு
பாலாற்றின் குறுக்கே வெங்குடியில் தடுப்பணைக்கு.ரூ.70 கோடி: நீர்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு
பாலாற்றின் குறுக்கே வெங்குடியில் தடுப்பணைக்கு.ரூ.70 கோடி: நீர்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு
ADDED : மார் 19, 2025 07:26 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அருகே வெங்குடியில், பாலாற்றின் குறுக்கே, 70 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தடுப்பணை கட்ட அரசு முன்னுரிமை அளிக்கப்படும் என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
பாலாற்றில் வரும் வெள்ள நீரை மடைமாற்றி, ஒவ்வொரு ஆண்டும் பல ஏரிகள் நிரப்பப்படுகின்றன. வடகிழக்கு பருவமழையின் போது, பாலாற்றில் தண்ணீர் செல்வதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக உள்ள இந்த பாலாற்றில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாலாற்றில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என, 2017ல் அறிவித்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரத்தில் 28 கோடி ரூபாயிலும், வாயலுாரில் 30 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரத்தில் 32 கோடி ரூபாயிலும் நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட்டன.
இந்த மூன்று தடுப்பணைகளால், அருகில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. பழையசீவரம் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு பின், காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை.
பாலுார், வெங்குடி, பெரும்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் கேட்டு வந்தனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் நடக்கும் நீர்வளத்துறை மானிய கோரிக்கையின், இதன் அறிவிப்புக்காக காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விளக்கத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட வெங்குடி பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான திட்டத்தை, அமைச்சர் ஆவன செய்வாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
வெங்குடியில் இருந்து 58 கி.மீ., துாரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதுப்பாடி பகுதியில் ஒரு அணையும், 8 கி.மீ., துாரத்தில் பழையசீவரம் பகுதியில் ஒரு அணையும் உள்ளது. இடையே வேறு எந்த இடத்திலும் அணையும் கிடையாது.
எனவே, வெங்குடியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டியது அவசியமாகிறது என்பதை, அரசு உணர்ந்துள்ளது.
வெங்குடியில் பாலாற்றின் குறுக்கே 70 கோடி ரூபாயில், 660 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயரமும் உடைய அணையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.
இந்த அணை கட்டப்படும்பட்சத்தில், 12 கிராமங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நில நீர் செறிவூட்டப்படும். 2,400 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். எனவே, இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபையில் நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதை தொடர்ந்து, நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, வெங்குடியில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.