Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு உயிரிழப்பு தடுக்க கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும்

நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு உயிரிழப்பு தடுக்க கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும்

நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு உயிரிழப்பு தடுக்க கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும்

நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு உயிரிழப்பு தடுக்க கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும்

ADDED : மார் 19, 2025 09:00 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு, கட்டயமாக தடுப்பூசிகளை போட்டு தற்காத்துக் கொள்ள வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மாநிலம் முழுதும், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் வரை 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், 18 பேர் வெறி நாய்க்கடி என்ற, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், வட்டார ஆரம்பசுகாதார நிலையங்கள், சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், கடந்த ஆண்டு 20,000த்தை தாண்டி உள்ளது என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி முதல், டிசம்பர் வரையில், 17,974 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2024ம் ஆண்டு, ஜனவரி முதல், டிசம்பர் வரையில், 21,120 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரையில், 4,940 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல, ஆண்டுதோறும் நாய்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் இருக்கும் தெரு நாய்களால், பணி முடித்து வீடு திரும்புவோர், நடந்து செல்வோர் என, அனைத்து தரப்பினரையும் துரத்தி நாய்கள் கடிக்கின்றன.

இந்த தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, கிராமப்புற பொது மக்கள் மற்றும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:

தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தனியாக சென்றால், கூட்டமாக நாய்கள் துரத்துகிறது. இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு துரத்தலாம் என, நினைக்கும் போது ஏதேனும் ஒரு நாய் கடித்து விடுகிறது. நாய் கடித்து விட்டது என, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டி உள்ளது. இதை தவிர்க்க தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில், நாய் கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளன.

நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், கடிபட்ட இடத்தில் சுத்தமான சோப்பால் கழுவி சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் சென்று, கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, நான்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால், மிகவும் நல்லது. மேலும், மருத்துவர் கூறும் அறிவுரையும் கடை பிடிக்க வேண்டும்.

நாய் கடிக்கு தடுப்பூசி தான் நாங்கள் செலுத்த முடியும். நாய்களின் இனப்பெருக்கங்களை கட்டுபடுத்துவது கால்நடை துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று ஆண்டுகள் நாய்கடி விபரம்


மாதம் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
2023 2024 2025 (பிப். வரை)
ஜனவரி 1,689 1,595 2,490
பிப்ரவரி 1,418 1,539 2,450
மார்ச் 1,555 1,681
ஏப்ரல் 1,486 1,764
மே 1,651 1,740
ஜூன் 1,454 1,602
ஜூலை 1,337 1,845
ஆகஸ்ட் 1,369 1,422
செப்டம்பர் 1,349 1,745
அக்டோபர் 1,481 1,504
நவம்பர் 1,456 2,125
டிசம்பர் 1,729 2,508
-மொத்தம் 17,974 21,120 4,940







      Our Apps Available On




      Dinamalar

      Follow us