கடவூரில் மாசி மாத பெருவிழா தேரோட்டம்
கடவூரில் மாசி மாத பெருவிழா தேரோட்டம்
கடவூரில் மாசி மாத பெருவிழா தேரோட்டம்
ADDED : பிப் 25, 2024 03:48 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் ஜமீன்தார் குடும்பத்தார்களின் குலதெய்வமான, ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் திருக்கல்யாண மஹோத்ஸவம் மாசிமாத பெருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடவூரில், ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் திருக்கல்யாண மஹோத்ஸவம் மாசிமாத பெருவிழா ஜமீன்தார் மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மோகன்குமார் முத்தையா தலைமையில், கடவூர் அரண்மை அருகே கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவில் அன்னம், சிம்மம், ஆஞ்சனேயர், கருடன், ஆதிசேஷன், யானை, குதிரை வாகனம் என்று தனித்தனியாக சிறப்பு அலங்காரங்களில் ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா நடந்து வருகிறது.
நேற்று ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. பின் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, கருடன் வானத்தில் வட்டமிட்ட காட்சிகளை கண்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் பெரிய தேரில் வீதி உலா வந்து, கோவிலில் குடி புகுந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.