/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஜூன் 11, 2024 01:51 PM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், மங்களூருவை சேர்ந்தவர்கள் மனோ, 42, லிங்கராஜ், 40; இவர்களிடம், 25 லட்சம் ரூபாய் கொடுத்தால், 30 லட்சம் தருகிறோம் என, ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கும்மனுாருக்கு கடந்த மாதம் மர்ம கும்பல் வரவழைத்தது. அங்கு காரில் வந்த மர்ம கும்பல், மனோ, லிங்கராஜ் ஆகியோரிடம் இருந்து, 25 லட்சம் ரூபாயை பறித்து சென்றது.
இச்சம்பவத்தில், பா.ம.க., கட்சியை சேர்ந்த வக்கீலும், வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கனல் கதிரவன் மீது, சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர், ஓசூர் வக்கீல்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இச்சம்பவத்தில் கனல் கதிரவனுக்கு தொடர்பில்லை; போலீசார் அவர் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, ஓசூர் தாலுகா அலுவலகம் முன் இன்று (ஜூன் 11) காலை, 10:00 மணிக்கு, பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், வக்கீல் கனல் கதிரவன் மீது வழக்கு போட்ட போலீசாரை கண்டித்தும், வழக்கில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும், ஓசூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
இதில், 350க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம், போச்சம்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை வக்கீல்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டன. மொத்தம், 1,040 வக்கீல்கள் நேற்று மாவட்டம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.