ADDED : ஜூன் 16, 2024 05:07 AM
மதுரை: பூ வரத்து திடீரென குறைந்ததாலும் இன்று (ஜூன் 16) முகூர்த்தம் என்பதாலும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கு விற்கப்பட்டது.
மார்க்கெட் சங்க செயலாளர் முத்து கூறியதாவது: இருநாட்களுக்கு முன் வரை மல்லிகை வரத்து நன்றாக இருந்தது. கரடிக்கல், வடபழஞ்சி, தென்பழஞ்சி, வேடர்புளியங்குளத்தில் இருந்தும் காரியாபட்டியில் இருந்தும் தினமும் 7 முதல் 8 டன் வரை மல்லிகைப்பூ வரத்து கிடைக்கிறது. 10 நாட்களுக்கு முன் பெய்த மழையால் பூ உற்பத்தி குறைந்தது.
முகூர்த்தம் என்பதால் காலை ரூ.700 முதல் ரூ.800க்கு எதிர்பார்த்த நிலையில் விவசாயிகள் கொண்டு வந்த பூக்களின் வரத்து பாதியாக குறைந்தது. இதனால் விலை எதிர்பாராத வகையில் இருமடங்காக அதிகரித்தது. வரும் வெள்ளி வரை பூக்களின் விலையேற்றத்தில் பெரிய மாறுதல் இருக்காது என்றார். கனகாம்பரம் கிலோ ரூ.1000 முதல் ரூ.1200க்கும், பிச்சிப்பூ ரூ.800, முல்லை ரூ.500 முதல் ரூ.600, மதுரையின் டிங்டாங் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.100 - ரூ.120, அரளி ரூ.200, மரிக்கொழுந்து கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. தாமரை ஒன்றின் விலை ரூ.6. கோழிக்கொண்டை பூ வரத்து இல்லை. கேந்திப்பூ வரத்து குறைந்ததால் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது.