Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏழு கண்டங்களையும் 'பட்ஜெட்டில்' சுற்றும் தமிழன்

ஏழு கண்டங்களையும் 'பட்ஜெட்டில்' சுற்றும் தமிழன்

ஏழு கண்டங்களையும் 'பட்ஜெட்டில்' சுற்றும் தமிழன்

ஏழு கண்டங்களையும் 'பட்ஜெட்டில்' சுற்றும் தமிழன்

ADDED : பிப் 25, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நம் வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு எந்த அதிசயமும் தேவையில்லை. நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நமக்கு பிடித்ததாக இருந்தால் போதும் என உலக நாடுகளை சுற்றுவதையே விருப்பமாக மாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் 'பேக்பேக்கர்' குமார்.

சொந்த ஊர் ஈரோடு. இயற்பெயர் செந்தில்குமார். கோவையில் பி.இ., முடித்து ஐதராபாத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.இ., பயின்ற போது நண்பர் மூலம் சிங்கப்பூர் சுற்றி பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எம்.இ., முடித்து மிஷின் டிசைனிங் துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். உலகை சுற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க துவங்கியதால் தொடர் விடுமுறையுடன் கூடிய பணியே தேவைப்பட்டது.

அதனால் சென்னையில் தனியார் பல்கலையில் உதவிப்பேராசிரியராக பணியாற்ற துவங்கினேன். இப்பணியில் ஜூன், டிசம்பரில் தொடர் விடுமுறை கிடைத்தது. அந்த விடுமுறை வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக அமைந்தது. 2022 முதல் பேராசிரியர் பணியில் இருந்து வெளியேறி தற்போது உலக நாடுகளை சுற்றுவதை வேலையாக மாற்றி கொண்டேன்.

வெளிநாடு சுற்றுலா செல்வது எளிமையானது, பட்ஜெட்டிற்குள் சென்று வர முடியும் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அதற்கான திட்டமிடல், விமான டிக்கெட், சிம் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள், போக்குவரத்து, தங்குமிடம், உணவு முறைகள் உள்ளிட்டவை மற்றவர்களுக்கும் தெரிந்தால், அவர்களும் சென்று வெளிநாடுகளை சுற்றி பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என நினைத்தேன்.

அதனால் 'யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்' என யுடியூப் சேனல் மூலம் தெரியப்படுத்தி வருகிறேன். இதைப் பார்த்து பலரும் வெளிநாடு சுற்றுலா செல்ல துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலக பட்ஜெட் சுற்றுப்பயணத்தொடர் 50 நாள்கள், 5 நாடுகள் என்பதில் தான் முதலில் துவங்கியது. இந்த தொடரில் முதல் பயணமாக ஐரோப்பாவின் பால்கன் நாடுகள் என அழைக்கப்படும் அல்பைனியா, மேசபடோமியா, செர்பியா நாடுகளில் முதல் பட்ஜெட் சுற்றுப்பயணத்தை முடித்தேன்.

இங்கு ஓட்டல்களில் தங்குவதை தவிர்த்து விடுதிகளில் தங்கியதால் குறைந்த செலவில் காலை உணவும் பெற முடிந்தது. இந்திய உணவுகள் வெளிநாடுகளில் விலை அதிகமாக இருக்கும். உள்ளூர்வாசிகள் உணவருந்தும் தெருவோரக்கடைகளில் உட்கொள்வதால் சாப்பாடு செலவு குறைகிறது. டாக்ஸி பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து, அருகாமையில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது போன்ற வழிமுறைகளை கையாண்டால் விமான டிக்கெட் தவிர அதிக பட்சமாக ஒரு நாள் செலவு ரூ.2500 வீதம் 50 நாளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் முடித்து விடலாம். இந்த செலவுகளை சுற்றுலா செல்லும் நாடுகளுக்கு தகுந்தாற் போல கூடுதலாகவோ, குறைவாகவோ திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

விமான டிக்கெட்களில் ஒரு நாட்டிற்கு சென்று, மீண்டும் திரும்ப 'ரவுண்டு டிரிப்' டிக்கெட்டுகள் கிடைக்கிறது. இவை எப்போது சலுகை விலையில் கிடைக்கும் என தெரிந்து கொள்ள பல இணையதளங்கள் உள்ளது. டிக்கெட்டிற்கு தகுந்தாற் போல தொடர் விடுமுறை எடுத்து பட்ஜெட் பயணத்தை மேற்கொள்ளலாம்.

அனைத்து நாடுகளும் சுற்றுலா பயணிகள் வருவதை விரும்புகின்றனர். பயணிகள் சுற்றி பார்த்து விட்டு திரும்ப செல்லாமல் முறைகேடாக தங்குவதை நாடுகள் விரும்புவதில்லை. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவரால் சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அனைத்து நாடுகளுக்குமான துாதரகங்கள் இந்தியாவில் இல்லை. அமெரிக்கன் விசாவில் உள்ள பி 1, பி 2 என்ற இருவகையில் பி 1 என்பது தொழில் நிமித்தமாக செல்வது, பி 2 என்பது சுற்றுலா விசா. இந்த விசாக்களை வைத்திருந்தால் 50 நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும்.

இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் 5 முதல் 6 நாடுகளுக்கு விசாவில் குறிப்பிட்டிருந்த நாள்களுக்குள் சென்று வந்திருக்க வேண்டும். அதன் பின் வங்கி கணக்கு, போலீஸ் விசாரணை, துாதரக அதிகாரி நேர்காணல் என வழக்கமான நடைமுறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்படுகிறது. இதற்கு ரூ. 14 ஆயிரம் செலவாகும். இந்த விசா எடுப்பதற்கு முன்பு 26 நாடுகளுக்கு சென்று வந்திருந்ததால் எனக்கு ஒப்புதல் எளிதாக கிடைத்தது.

முதன் முதலாக அண்டார்டிகா சுற்றுப்பயணம் செய்தது அற்புத அனுபவமாக இருந்தது. அண்டார்டிகாவிற்கு உலகில் 4 பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் சுற்றுலா பயணங்கள் நடந்து வருகிறது. தென் அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது அங்கிருந்து அண்டார்டிகாவிற்கு கப்பல் மூலம் சென்றிருந்தேன். ஆர்டிக் பகுதியில் உள்ள நாடுகளுக்கு விரைவில் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். யுடியூப் சேனல் துவங்கிய பின் 53 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளில் 150 நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதே இலக்கு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us