Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை இன்ஸ்., ஜாமின் 7வது முறை தள்ளுபடி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை இன்ஸ்., ஜாமின் 7வது முறை தள்ளுபடி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை இன்ஸ்., ஜாமின் 7வது முறை தள்ளுபடி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை இன்ஸ்., ஜாமின் 7வது முறை தள்ளுபடி

ADDED : ஜூன் 24, 2025 06:35 AM


Google News
மதுரை: சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏழாவது முறையாக தள்ளுபடி செய்தது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தனர்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட ஒன்பது போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணை நடக்கிறது. ஸ்ரீதர் ஆறு முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் ஏழாவது முறை ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.வடமலை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

ஜாமின் அனுமதித்தால் மனுதாரர் தலைமறைவாகக்கூடும். இதனால், கீழமை நீதிமன்றத்தில் விசாரணை பாதிக்கப்படும் என, சி.பி.ஐ., மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளவில்லை. தன் தரப்பில் ஆஜராகி வாதிட சிறை விதிகளின்படி, வழக்கறிஞரை மனுதாரர் நியமித்துக்கொள்ள வேண்டும். ஜாமின் கோர மனுதாரர் குறிப்பிடும் காரணங்கள் ஏற்புடையதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

'5 ஆண்டுகள் ஆகியும்

நீதி கிடைக்கவில்லை'ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ஐந்தாமாண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் சாத்தான்குளத்தில் அனுசரிக்கப்பட்டது. ஜெயராஜின் மகள் பெர்சி மற்றும் உறவினர்கள் கூறியதாவது:கடந்த 2020ல் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். வழக்கில் போதுமான சாட்சிகள் இருந்தும் தீர்ப்பு கிடைக்காதது வேதனையை தருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட 9 போலீசாரின் வழக்கறிஞர்களும் வெவ்வேறு காரணங்களை சொல்லி வழக்கை தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கிற்கான நீதிபதி நியமிக்கப்படாமல் பொறுப்பு நீதிபதி தொடர்கிறார். தனி நீதிபதி நியமிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டு நினைவு நாளுக்கு முன்பாக எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us