Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தாய்ப்பால் தாங்க..! தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும்: பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க உதவலாம்

தாய்ப்பால் தாங்க..! தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும்: பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க உதவலாம்

தாய்ப்பால் தாங்க..! தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும்: பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க உதவலாம்

தாய்ப்பால் தாங்க..! தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும்: பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க உதவலாம்

ADDED : ஜூன் 10, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கியில் 40 லிட்டர் கொள்ளளவுள்ள 'ப்ரீசர்' வசதியிருந்தாலும் தினமும் ஒன்றரை லிட்டர் அளவே தாய்ப்பால் தானமாக பெறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற பெண்களும் தாய்ப்பாலை தானமாக வழங்கலாம்.

மாநில அரசு சார்பில் 2015 முதல் தாய்ப்பால் வங்கி திட்டம் மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது. இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு உள், வெளி நோயாளிகள் வார்டில் 150 குழந்தைகள் வரை சிகிச்சையில் இருக்கின்றனர். இவர்களில் பலர் குறைவான எடையுடனுடனும், குறை பிரசவத்தில் பிறந்தவர்களாகவும் உள்ளனர். தாயை இழந்த குழந்தைகள், தாய்ப்பால் சுரக்காத பெண்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தால் தான் அவற்றின் வளர்ச்சி முழுமையடையும் என்கிறார் துறைத்தலைவர் அசோக் ராஜா.

அவர் கூறியதாவது: எடை குறைவான குழந்தைகளின் குடல் வளர்ச்சி முழுமையாக இருக்காது. தாய்ப்பாலை மட்டுமே இக்குழந்தைகளால் செரிக்க இயலும். மாற்றுப்பால் கொடுத்தால் வயிறு நீக்கம் ஏற்படும். சில நேரங்களில் குடலுக்கான ரத்தஓட்டம் குறைந்து அழுகி விடுவதற்கும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான முதல் சிகிச்சையே தாய்ப்பால் தான்.

தானம் பெறுகிறோம்

இங்குள்ள மகப்பேறு வார்டில் குழந்தை பெறும் பெண்களிடம் தாய்ப்பால் தானம் கேட்பதற்காக தனியாக கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் தினமும் வார்டுக்கு சென்று 'கவுன்சிலிங்' செய்கிறோம். குறைந்தது 50 மில்லி, 100 மில்லி என தினமும் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தாய்ப்பாலை தானமாக பெற்று அதை ஆய்வகத்திற்கு அனுப்புகிறோம். ஐந்தடுக்கு பரிசோதனைக்கு பின் பின்பே வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குகிறோம். எங்களிடம் 40 லிட்டர் கொள்ளளவுள்ள தாய்ப்பாலை சேகரித்து பாதுகாக்கும் அளவுக்கு 'ப்ரீசர்' வசதியுள்ளது. தானம் குறைவாக கிடைக்கிறது.

சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மஞ்சள்காமாலை இல்லாத, தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற பெண்களும் தானம் செய்யலாம். வீட்டிலேயே தாய்ப்பாலை எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரித்து தாய்ப்பால் வங்கியில் நேரடியாக கொடுக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் தங்களது சொந்த குழந்தைக்கான பாலை இம்முறையில் சேகரித்து அறை வெப்பநிலையில் 4 மணி நேரம் வைத்திருக்கலாம். அல்லது பிரிட்ஜில் 8 மணி நேரம் வைத்திருந்து குழந்தைகளுக்கு வழங்கலாம் என்றார்.

மகப்பேறு வார்டு வளாகத்தின் 5வது மாடியில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us