/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'பூஜை கற்பூரத்திற்கு' ஜி.எஸ்.டி., 18 சதவீதம் 'பூஜை கற்பூரத்திற்கு' ஜி.எஸ்.டி., 18 சதவீதம்
'பூஜை கற்பூரத்திற்கு' ஜி.எஸ்.டி., 18 சதவீதம்
'பூஜை கற்பூரத்திற்கு' ஜி.எஸ்.டி., 18 சதவீதம்
'பூஜை கற்பூரத்திற்கு' ஜி.எஸ்.டி., 18 சதவீதம்
ADDED : செப் 24, 2025 08:33 AM
மதுரை : 'ஜி.எஸ்.டி., சீரமைப்பிலும் கற்பூரத்திற்கான 18 சதவீத வரியை குறைக்கவில்லை. இதை பூஜை பொருட்களுக்கான குறியீட்டு (எச்.எஸ்.என்.) பட்டியலில் சேர்த்தால் 5 சதவீத வரியாக குறையும்' என தமிழ்நாடு கற்பூர வில்லையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இறைவழிபாட்டின் முதன்மைப்பொருளாக விளங்கும் கற்பூரத்திற்கு எட்டாண்டுகளாக 18 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. வரி சீரமைப்புக்கு முன்பே மத்திய அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் வரிக்குறைப்பு செய்யவில்லை என்கின்றனர் இதன் சங்கத் தலைவர் மனோகரன், செயலாளர் பாண்டியராஜன்.
மதுரையில் அவர்கள் கூறியதாவது:
பச்சை கற்பூரத்தை உணவிலும், பீடாவிலும் சுவைக்காக சேர்ப்பார்கள். நாங்கள் கேட்பது வழிபாட்டிற்குரிய பூஜை கற்பூரம். இதற்கு ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தியதில் இருந்தே 18 சதவீத வரி தான் உள்ளது. வரியை குறைக்க வேண்டும் என ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் போதெல்லாம் 'உங்கள் கோரிக்கை நியாயமானது' என்கின்றனரே தவிர வரியை குறைக்கவில்லை.
பைன் மரத்தின் பாலில் இருந்து எடுக்கப்படும் 'ஆல்பா பைன்' தான் கற்பூரத்திற்கான மூலப்பொருள். இதை இறக்குமதி செய்து தான் வெவ்வேறு வடிவங்களில் பூஜை கற்பூரம் தயாரிக்கிறோம். ஒரு கிலோ மூலப்பொருளை பிரிக்கும் போது சோப்பு, தலைவலி தைலம் போன்ற வெவ்வேறு பயன்பாட்டுக்கான பொருட்களும் கிடைக்கின்றன. மூலப்பொருளில் இருந்து 30 சதவீத அளவு தான் பூஜை கற்பூரம் கிடைக்கும். மீதி கிடைக்கும் 70 சதவீத பொருட்களை ஜி.எஸ்.டி.,யில் எச்.எஸ்.என்., குறியீட்டு எண் 2914ன் கீழ் பட்டியலிட்டு 18 சதவீத வரி விதிக்கின்றனர். அதாவது ஆர்கானிக் வேதியியல் பொருட்களுக்கான குறியீட்டில் பூஜை கற்பூரமும் சேர்க்கப்பட்டுள்ளதால் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அகர்பத்தி, சாம்பிராணி, பூஜை எண்ணெய் போன்ற பூஜை பொருட்களுக்கான எச்.எஸ்.என்., 3307 குறியீட்டு எண்ணுக்கு கீழ் பூஜை கற்பூரத்தையும் கொண்டு வந்தால் 5 சதவீத வரிக்கு மாற்றி விடலாம்.
திருத்தப்பட்ட வரி சீரமைப்பில் பூஜை எண்ணெய் 12 ல் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்பட்டது. ஆனால் பூஜை கற்பூரத்தை சேர்க்காமல் விட்டதால் தற்போதும் 18 சதவீத வரியே விதிக்கப்படுகிறது. தமிழக அரசு இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பூஜை பொருட்களுக்குரிய 5 சதவீத வரி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.