/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை கலெக்டர் அலுவலகம் ஆறரை மணி நேரம் முடக்கம்மதுரை கலெக்டர் அலுவலகம் ஆறரை மணி நேரம் முடக்கம்
மதுரை கலெக்டர் அலுவலகம் ஆறரை மணி நேரம் முடக்கம்
மதுரை கலெக்டர் அலுவலகம் ஆறரை மணி நேரம் முடக்கம்
மதுரை கலெக்டர் அலுவலகம் ஆறரை மணி நேரம் முடக்கம்
ADDED : பிப் 01, 2024 02:09 AM

மதுரை:மதுரையில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். மாவட்ட தலைவர் வீரமணி, செயலர் பாலமுருகன், பொருளாளர் மாரியப்பன் தலைமையில் வந்த அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் கேட்டை இழுத்து மூடினர்.
இதனால் கேட் முன், ரோட்டில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
துணை கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
கேட்டின் முன் போராட்டக்காரர்கள் அமர்ந்ததால் பொதுமக்கள், அலுவலர்கள் யாரும் உள்ளே, வெளியே செல்ல முடியவில்லை. காலை 10:30 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணியை தாண்டியும் போராட்டம் நீடித்தது.
அதுவரை மற்றொரு கேட் வழியாக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அடையாள அட்டையை காட்டி உள்ளே வெளியே சென்றனர். போராடியவர்கள் கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்தனர்.
ஆனால் நேற்று, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் தமிழக அரசு திட்ட துவக்க நிகழ்ச்சி வாடிப்பட்டி தாலுகாவில் நடந்ததால், கலெக்டர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் பலரும் அங்கு சென்று விட்டனர்.
ஏற்கனவே சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் பலர், விடுப்பு போராட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், 6 மணி நேரத்திற்கும் மேலாக கேட் பூட்டப்பட்டதால் ஊழியர்களும் இல்லாத நிலையில், அலுவலக பணிகள் பாதித்தன.


