Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பந்தாடும் 'பல்லாங்குழி' ரோடுகளால் வாகன ஓட்டிகளுக்கு நொறுங்குது இடுப்பு: தரமில்லாததால் மதுரையில் தினமும் 'அக்கப்போர்' தான்

பந்தாடும் 'பல்லாங்குழி' ரோடுகளால் வாகன ஓட்டிகளுக்கு நொறுங்குது இடுப்பு: தரமில்லாததால் மதுரையில் தினமும் 'அக்கப்போர்' தான்

பந்தாடும் 'பல்லாங்குழி' ரோடுகளால் வாகன ஓட்டிகளுக்கு நொறுங்குது இடுப்பு: தரமில்லாததால் மதுரையில் தினமும் 'அக்கப்போர்' தான்

பந்தாடும் 'பல்லாங்குழி' ரோடுகளால் வாகன ஓட்டிகளுக்கு நொறுங்குது இடுப்பு: தரமில்லாததால் மதுரையில் தினமும் 'அக்கப்போர்' தான்

UPDATED : டிச 04, 2025 02:27 PMADDED : டிச 04, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை நகரில் பெரும்பாலான ரோடுகள் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடப்பதால் சிறிய மழை பெய்தாலும் இடுப்பு ஒடியும் வகையில் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்து சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அதிகாரிகள் மீது அவர்களுக்கு கடுப்பு ஏற்படுகிறது. நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப ரோடு வசதி இல்லை. பல இடங்களில் இருபுறங்களிலும் நிரம்பி வழியும் ஆக்கிரமிப்புகளால் பெரும் ரோடுகளும் குறுகி 'ஒத்தையடி' பாதையாகவே ரோடுகள் மாறிவிட்டன.

தற்போது கோரிப்பாளையம், செல்லுார் ரோடு, மேலமடை மேம்பாலப் பணிகளாலும் அப்பகுதிகளை கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே பல பகுதிகளில் தார் ரோடுகள் 'ஜல்லி ஜல்லியாய்' கிடக்கின்றன. இதற்கு காரணம், தரமின்மை தான். இதனால் சிறிய மழைக்கே நகர் ரோடுகளில் பல்லாங்குழி பள்ளங்கள் ஏற்படுகின்றன.

Image 1503666
நல்லா இருந்த ரோடு

இதுதவிர முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டது. இப்பணிக்காக நல்ல நிலையில் இருந்த பல ரோடுகள் தோண்டப்பட்டன. பணிமுடிந்தபின் ஒப்பந்ததாரர்கள் அதனை சரியாக மூடாமல் விட்டுச் சென்றனர். சில இடங்களில் பள்ளங்களை மூடினாலும் அது குழிவிழுந்து, வாகனங்கள் கடந்து செல்வதால் ரோடுகள் சேதமடைந்துள்ளன.

மழை பெய்தால் இதுபோன்ற ரோடுகளை தட்டுத்தடுமாறித்தான் கடக்க வேண்டியுள்ளது. பல இடங்களில் விபத்துகள் நடந்து வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். இப்பிரச்னையை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் நான்கு சுவருக்குள் இருந்து உத்தரவு போடுவதை மட்டும் பணியாக கொண்டிருக்கின்றனர். இதனாலேயே ரோடுகளை எவ்வளவு மோசமாக அமைத்தாலும் ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எல்லாமே புதுசு தான்

நகரில் 90 சதவீத ரோடுகள் புதிதாக அமைக்கப்பட்டவையே. ஒருமுறை அமைக்கும் ரோடு 5 ஆண்டுகளாவது தாங்க வேண்டும். ஆனால் மூன்றே மாதங்களில் 'பல்லிளித்து' விடுகின்றன. முதல்வர் உட்பட முக்கிய வி.ஐ.பி.,கள் வருகை, விழாக் காலங்களில் ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள 10க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகின்றன. அவர்கள் சிறிது தார்க் கலவையை போட்டு மூடிவிட்டு தொகையை 'கிளைம்' செய்து கொள்கின்றனர். மறுநாள் மழை பெய்தால் அந்த 'பேட்ச் ஒர்க்' அதோ கதியாகி இம்சை தருகின்றன. இதனால் சேதமான இடமே மீண்டும் மீண்டும் சேதமடைகின்றன.

அம்மாடியோவ்... ஆரம்பமே 23 சதவீதம்


மாநகராட்சி அலுவலர்கள் சிலர் கூறியாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ரோடு பணிகளை மேற்கொள்ள கான்ட்ராக்டர்கள், உள்ளூர் அரசியல் கட்சியின் 'மேல் மட்டத்திற்கு' 10 சதவீதம் இருந்து அதிகாரிகள் வரை 25 சதவீதம் வரை கமிஷனாகக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஆரம்ப கமிஷனே 23 சதவீதமாகிவிட்டது. அதை தாண்டி அதிகாரிகள் 40 சதவீதம் வரை கமிஷன் பெறுகின்றனர். மீதமுள்ள 60 சதவீதத் தொகையில் கான்ட்ராக்டர்கள் எப்படி தரமான ரோடுகளை அமைப்பர். சில அதிகாரிகள் எந்தச் சூழலிலும் நேர்மையாகவே உள்ளனர் என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us