Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு வரி விலக்கு: ஐகோர்ட்டில் தகவல்

மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு வரி விலக்கு: ஐகோர்ட்டில் தகவல்

மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு வரி விலக்கு: ஐகோர்ட்டில் தகவல்

மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு வரி விலக்கு: ஐகோர்ட்டில் தகவல்

ADDED : அக் 16, 2025 04:57 AM


Google News
மதுரை: பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் வாகனத்திற்கு மோட்டார் வாகன வரி, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி காருனியா சீலாவதி ஏற்கனவே தாக்கல் செய்த மனு: நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. உடல் ஊனத்தின் தன்மை 100 சதவீதம் உள்ளதற்கு அடையாள அட்டை உள்ளது. பயணங்களுக்கு மூன்றாம் நபரைச் சார்ந்துள்ளேன். டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வது சிரமம். சொந்த பயன்பாட்டிற்காக கார் வாங்க உள்ளேன். மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக தனியாக வடிவமைக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கு வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க 1976 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலக்குகோரி திருநெல்வேலி மண்டல போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நிராகரித்தார். வாகனத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து வரிவிலக்கு கோரியதை மத்திய கனரக தொழில்கள்துறை சார்பு செயலர் நிராகரித்தார். இரு உத்தரவுகளையும் ரத்து செய்து, வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 2023 ல் நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு: மாற்றுத்திறனாளிகளுக்கான டில்லி தலைமை கமிஷனர்,'முழுமையாக பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் வாகனத்தை சுயமாக ஓட்ட முடியாது. அவர்கள் மாற்றுத்திறனாளிகள்தான். இத்தகைய நபர்களுக்கு ஜி.எஸ்.டி.,சாலை வரி, சுங்கவரியில் சலுகை அளிக்க விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும்,'என பரிந்துரைத்தார். பார்வையற்றவர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் குறிப்பாக அரசுத்துறைகளில் அளிக்கப்படுகிறது. அவர்கள் பணியிடத்திற்குச் சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மோட்டார் வாகன வரி, ஜி.எஸ்.டி.,யிலிருந்து மனுதாரருக்கு விலக்கு அளிப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

இதை நிறைவேற்றாததால் தமிழக போக்குவரத்துத்துறை செயலர் பனீந்தர ரெட்டி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என காருனியா சீலாவதி மனு செய்தார்.

நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அரசு தரப்பில்,'இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது,' எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us