Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சரியான உடல் எடை இருந்தாலும் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு

சரியான உடல் எடை இருந்தாலும் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு

சரியான உடல் எடை இருந்தாலும் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு

சரியான உடல் எடை இருந்தாலும் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு

ADDED : டிச 04, 2025 06:32 AM


Google News
மதுரை:சரியான உடல்எடையில் இருந்தாலும் உடலில் கொழுப்பு அதிகமாக இருந்து ஸ்ட்ரோக், மாரடைப்பு, சர்க்கரைநோய் உருவாக்கலாம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறைத்தலைவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர்.

அவர் கூறியதாவது: உயரம், உடல் எடையை வைத்து தான் உடலில் கொழுப்பு உள்ளதென 'பி.எம்.ஐ.,' அளவுகோலை வைத்து சொல்வோம். ஆய்வின் படி இந்தியா, சீனா, கொரியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு உடல் கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிக கொழுப்பானது ஸ்ட்ரோக், மாரடைப்பு, சர்க்கரைநோய் வர முக்கிய காரணமாக உள்ளது. சரியான உடல் எடையில் இருக்கிறோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. இவர்களுக்கு குறிப்பாக 'விஸ்ரல் பேட்' எனப்படும் வயிற்றுக்கொழுப்பு அதிகமாக இருக்கும்.

யாருக்கு 'ரிஸ்க்'


வெளிநாட்டவருக்கு அதிக எடை பொதுவான விஷயமாக இருக்கும். எலும்பின் எடை சரியான அளவில் இருப்பதால் 'ரிஸ்க்' குறைவு. இந்தியர்களுக்கு தொப்பை அதிகமுள்ள உடற்பருமனாக உள்ளதால் 'ரிஸ்க்' அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கொழுப்பு பங்கீடு மாறும். தொடைப்பகுதியில் கொழுப்பு படியும். ஆண்களுக்கு வயிற்றில் கொழுப்பு படியும். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து சிகிச்சையோ உடற்பயிற்சிகளோ செய்ய வேண்டும்

உடலில் கொழுப்பை கண்டறியும் சிறந்த கருவி 'டெக்ஸா ஸ்கேன்'. இதில் கை, கால், தொடை, வயிற்றுப்பகுதியில் எத்தனை சதவீதம் கொழுப்பு என தனித்தனியாக காண்பிக்கும். சரியான எடையில் இருந்தும் கொழுப்பு அதிகமாக இருந்தால் உடற்பயிற்சியை அதிகரிக்கலாம், யோகா, நடைபயிற்சி, சைக்கிளிங் செய்யலாம்.

உணவில் மாற்றம்


உடல் எடையை குறைப்பதில் உணவுப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவு, மைதா உணவுகள், பாலீஷ் அரிசி சாப்பிடுவதை குறைக்க வேண்டும். அரிசியை தீட்ட தீட்ட கார்போஹைட்ரேட் உணவாக மாறுகிறது. திருமணத்திற்கு முன் உடல் எடையில் கவனம் செலுத்துவதோடு நிறுத்தக்கூடாது. சரியான உடல் எடை (பிட்னஸ்) அழகுக்கான விஷயமல்ல, ஆரோக்கியத்திற்கான முயற்சி. இதுவே மனநலத்திற்கும் உதவும், வாழ்க்கைமுறை எளிதாக இருக்கும்.

மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 'டெக்ஸா ஸ்கேன்' வாங்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us