ADDED : ஜூன் 13, 2026 01:53 AM

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில், தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், திண்டுக்கல் - குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்டக் குழு சார்பில் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் இருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்படும் ரயில், காலை 10:00 மணிக்கு போடி செல்கிறது. மறுமார்க்கத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 7:50 மணிக்கு மதுரை வருகிறது. இது தேனி மாவட்ட மக்களின் தினசரி பயணத் தேவைக்கு நேர்மாறாக உள்ளது.
கல்வி, மருத்துவம், பணிக்காக பலர் மதுரை வந்து செல்கின்றனர். விவசாயிகள், சிறு வணிகர்கள் விளைபொருட்களை காலையில் மதுரை கொண்டு வர ரயில் வசதி இல்லாததால் அதிக கட்டணத்தில் பஸ், லாரியில் அனுப்புகின்றனர்.
எனவே போடி - மதுரை இடையே காலை 7:00 மணிக்கும், மதுரை - போடி இடையே இரவு 7:00 மணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
