/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குலமங்கலத்தில் யூரியா உரம் தட்டுப்பாடா குலமங்கலத்தில் யூரியா உரம் தட்டுப்பாடா
குலமங்கலத்தில் யூரியா உரம் தட்டுப்பாடா
குலமங்கலத்தில் யூரியா உரம் தட்டுப்பாடா
குலமங்கலத்தில் யூரியா உரம் தட்டுப்பாடா
ADDED : செப் 14, 2025 04:15 AM
மதுரை: குலமங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா உரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: குலமங்கலம், கள்ளந்திரி பகுதியில் இருபோக சாகுபடிக்கான முதல் போக நெல்லுக்கு ஜூலை 17ல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நாற்று நட்ட 40 நாட்களுக்குள் யூரியா மேலுரம் இட வேண்டும். ஒரு மாதமாக குலமங்கலம் பகுதியில் யூரியா தட்டுப்பாடாக உள்ளது. இங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா கிடைக்கவில்லை. தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்கி இடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். சாகுபடி காலத்தில் ஒவ்வொரு கடன் சங்கத்தைச் சார்ந்துள்ள விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு உரத்தை சரியான அளவில் விநியோகிக்க வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் பொன்னுசாமி கூறுகையில்,''நாளை (செப். 15) உரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தேவையின் அடிப்படையில் சங்கங்களுக்கு உரம் வழங்கப்படுகிறது'' என்றார்.
வேளாண் இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், ''மதுரை மாவட்டத்தில் உள்ள 174 கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் 1950 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. செப்.18ல் 500 டன் கிரிப்கோ உரம் சூரத்தில் இருந்து வருகிறது. டி.ஏ.பி., 980 டன், பொட்டாஷ் 995 டன், காம்ப்ளக்ஸ் உரம் 4776 டன் இருப்பு உள்ளது'' என்றார்.