/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ மயிலாடுதுறையில் மழை சம்பா பயிர்கள் பாதிப்பு சுவர் இடிந்து மூவர் காயம் மயிலாடுதுறையில் மழை சம்பா பயிர்கள் பாதிப்பு சுவர் இடிந்து மூவர் காயம்
மயிலாடுதுறையில் மழை சம்பா பயிர்கள் பாதிப்பு சுவர் இடிந்து மூவர் காயம்
மயிலாடுதுறையில் மழை சம்பா பயிர்கள் பாதிப்பு சுவர் இடிந்து மூவர் காயம்
மயிலாடுதுறையில் மழை சம்பா பயிர்கள் பாதிப்பு சுவர் இடிந்து மூவர் காயம்
ADDED : அக் 22, 2025 08:16 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் கனமழை பெய்தது. மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட் டது.
மாவட்டத்தில் 66,768 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 22,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 12,000 ஹெக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த வயல்களில் மழைநீர் தேங்கி இளம் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு ம் வலியுறுத்தியுள்ளனர்.
சுவர் இடிந்து மூவர் காயம் கனமழையின்போது நேற்று காலை சீர்காழி அருகே உள்ள புதுத்துறை வடபாதி கிராமத்தில் தாமஸ் என்பவரின் தொகுப்பு வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அவரது மகள் சுவேதா,15, காயமடைந்தார். அவரை, சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயிலாடுதுறையில், திருவாரூர் பிரதான சாலையையொட்டி வசித்து வரும் முரளி, கண்ணன் ஆகிய இருவரின் வீட்டு சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
இதில் முரளி மனைவி வள்ளி, மற்றொரு வீட்டில் வசித்த கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சீர்காழி விளந்திடசமுத்திரம் கீழத்தெருவில் தொழிலாளி முத்துக்குமார் என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்தது.
மீன்பிடி தொழில் பாதிப்பு மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 28 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று மதியம் 2:30 மணி நிலவரப்படி மயிலாடுதுறை 78.60 மி.மீ., மணல்மேடு 54, சீர்காழி 86.20, கொள்ளிடம் 66.40, தரங்கம்பாடி 25.50, செம்பனார்கோவில் 82.40 மழை அளவு பதிவானது.


