Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆடிப்பெருக்கு, அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை

ஆடிப்பெருக்கு, அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை

ஆடிப்பெருக்கு, அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை

ஆடிப்பெருக்கு, அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை

ADDED : ஆக 03, 2024 01:12 AM


Google News
நாமக்கல்,'காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, மோகனுார், ப.வேலுார், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கான இன்றும், ஆடி அமாவாசையான நாளையும், பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதையடுத்து, 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக தங்கள் உடமைகளுடன், பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலோ சென்று தங்க வேண்டும்.

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகள் குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள குமாரபாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவில், ப.வேலுார் காசி விஸ்வநாதர் கோவில்.

ஜமீன் இளம்பள்ளி உமா மகேஸ்வரர் கோவில், கொத்தமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில், தேவராயசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் ஆடிப்பெருக்கான இன்று, ஆடி அமாவாசையான நாளை ஆகிய இரண்டு நாட்கள் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us