/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அஞ்சல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவுமுதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அஞ்சல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
முதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அஞ்சல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
முதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அஞ்சல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
முதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அஞ்சல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 28, 2024 02:05 AM
நாமக்கல், முதியவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் வழங்க அஞ்சல் துறைக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமாரபாளையம் அருகே கடச்சநல்லுாரை சேர்ந்தவர் திருமாறன், 70. இவரது பேத்தி காருண்யாவுக்கு, சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் எஸ்.பி., காலனியில் உள்ள அஞ்சலகத்தில், 2015 மார்ச் மாதத்தில் கணக்கு தொடங்கினார். 2021 மார்ச் வரை மாதத்துக்கு, 12,500 ரூபாயை திருமாறன் அஞ்சலகத்தில் செலுத்தி வந்துள்ளார். 2021 ஜூலை மாதத்தில் மூன்று மாதத்திற்கான பணத்தை கணக்கில் செலுத்த, இவர் அஞ்சலகம் சென்றபோது, அதிகாரி பணத்தை வாங்க மறுத்ததோடு கணக்கை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதற்கான காரணத்தை திருமாறன் கேட்டபோது, பெற்றோர் உயிருடன் இருக்கும் போது பேத்திக்காக தாத்தா சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க முடியாது என்றும், எனவே, கடிதம் கொடுத்தால் செலுத்திய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் என்று அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிகாரி கட்டாயப்படுத்தியதால், கணக்கை முடிக்க திருமாறன் அஞ்சலகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட அஞ்சல் துறையினர் அவர் செலுத்திய, 3,37,730 ரூபாய்க்கு மட்டும் காசோலை வழங்கியுள்ளனர். இதன் பின்னர் பணம் செலுத்திய காலத்துக்கு வட்டி தருமாறு, பலமுறை அஞ்சல் துறைக்கு திருமாறன் விண்ணப்பம் அனுப்பியும், வட்டி தொகையை வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட முதியவர் கடந்த, 2023 மார்ச் மாதத்தில் அஞ்சல் துறை மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், அஞ்சல் துறையினர் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
முதியவர், பேத்திக்கு கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தில் பெற்றோர் உயிருடன் உள்ளனரா? மைனர் குழந்தை எங்கு வசிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் அஞ்சல் துறையினரால் கேட்கப்படவில்லை. கணக்கு தொடங்க அனுமதித்த பின்னர், தவறுதலாக விதியை மீறி கணக்கு தொடங்கப்பட்டதாக அறியப்பட்டாலும், வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படும் என்பது வாடிக்கையாளர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும்.
இதனால் அஞ்சலக வாடிக்கையாளரான முதியவர் செலுத்திய அசல் தொகைக்கு வட்டி, 1,00,162 ரூபாய் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, 50,000 ரூபாய் ஆகியவற்றை அஞ்சல் துறையினர் நான்கு வாரங்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.