Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காவிரியில் கதவணை கைவிட்டதால் 2 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

காவிரியில் கதவணை கைவிட்டதால் 2 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

காவிரியில் கதவணை கைவிட்டதால் 2 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

காவிரியில் கதவணை கைவிட்டதால் 2 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

ADDED : அக் 04, 2025 01:31 AM


Google News
நாமக்கல், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, மோகனுார்-நெரூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டதால், நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. ஆற்று பாசனத்தை மையப்படுத்தி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டுக்காக, மோகனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டுமென, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகாவுக்குட்பட்ட ஒருவந்துார்-கரூர் மாவட்டம், நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இச்சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., பொறுப்பேற்றது. இதையடுத்து, முதல் சட்டசபை கூட்டத்தொடரில், கதவணை திட்டம், 700 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில், 'மோகனுார்-நெரூர் இடையேயான கதவணை திட்டம் கைவிடப்படுவதாக' அறிவிக்கப்பட்டது. இது, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நாமக்கல், கரூர் மாவட்ட மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில், 'மோகனுார்-நெரூர் தடுப்பணை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனுாருக்கும், கரூர் மாவட்டம் நெரூர் இடையே, காவிரி ஆற்றில் கதவணை கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்து, கைவிடப்பட்ட காவிரி கதவணை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கடந்த, அ.திமு.க., ஆட்சியில், திட்டத்தை ஆய்வு செய்வதற்காக, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கதவணை திட்டம் இடம் பெற்றிருந்தது.

அதன்படி, சட்டசபையில், 765 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து, திட்டத்தை அறிவித்தனர். ஆனால், ஐந்து மாதங்களுக்கு பின், இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தியும், இதுவரை திட்டத்தை செயல்படுத்தவில்லை.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, போதிய தடுப்பணை இல்லாததால், தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அவற்றை தடுக்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், விளை நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறவும் கதவணை திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us