/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மனைவியை மீட்டு தரக்கோரி எஸ்.பி.,யிடம் கணவர் புகார் மனைவியை மீட்டு தரக்கோரி எஸ்.பி.,யிடம் கணவர் புகார்
மனைவியை மீட்டு தரக்கோரி எஸ்.பி.,யிடம் கணவர் புகார்
மனைவியை மீட்டு தரக்கோரி எஸ்.பி.,யிடம் கணவர் புகார்
மனைவியை மீட்டு தரக்கோரி எஸ்.பி.,யிடம் கணவர் புகார்
ADDED : செப் 26, 2025 02:16 AM
ராசிபுரம் :மனைவியை மீட்டுத்தரக்கோரி, எஸ்.பி.,யிடம் கணவர் மனு அளித்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 25. இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபுக்கும், சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்த கோமதி, 22, என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்களிலேயே கோமதி கல்லுாரி படிப்பை காரணம் காட்டி, ஓமலுாரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
கல்லுாரி படிப்பை முடித்த பின், ராசிபுரத்தில் உள்ள சித்தி ஜெயஸ்ரீ வீட்டில் தங்கியுள்ளார். கடந்த, 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோமதி மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து ஜெயஸ்ரீ ராசிபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கல்லுாரி படிக்கும்போது, இன்ஸ்டாகிராமில் சேலம், உடையாபட்டியை சேர்ந்த ராகுலுக்கும், கோமதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த பெற்றோர் உடனடியாக கோமதிக்கும், பிரபுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் காதலை விட மறுத்த கோமதி, படிப்பு முடிந்ததும் ராகுலுடன் சென்றுவிட்டது தெரிந்தது. கடந்த, 18ம் தேதி கோமதியை ராசிபுரம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது சித்தி ஜெயஸ்ரீ மற்றும் பெற்றோர், உறவினர்கள் இருந்துள்ளனர். விசாரணையில் மேஜரான கோமதி தன்னுடைய விருப்பப்படி வாழ்கிறேன் என கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் பிரபு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ராசிபுரம் எஸ்.ஐ., சுரேஷ், 10 நிமிடம் மட்டுமே கோமதியிடம் பேசிவிட்டு அவரை மீண்டும் ராகுலுடன் அனுப்பி விட்டார். என்னிடம் விசாரிக்கவில்லை. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, வழக்கு முடிந்து விட்டது. உன் மனைவியை அவர்களுடனே அனுப்பி வைத்து விட்டேன் என்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ராசிபுரம் போலீசார் கூறுகையில்,' விசாரணையில் கோமதி மேஜர் என்பது தெரிந்தது. புகார் அளித்த ஜெயஸ்ரீ மற்றும் கோமதி பெற்றோரிடம், 2 மணி நேர விசாரணைக்கு பின்புதான் ராகுலுடன் அனுப்பி வைத்துள்ளோம்,' என்றனர்.