ADDED : ஜூன் 17, 2025 02:03 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் பகுதியில், 12 விவசாய குடும்பங்கள் செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவசர தேவைக்கு பள்ளி வாகனங்கள் மற்றும் '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை கூட செல்ல முடியாத சூழல் இருந்தது. இதுசம்பந்தமாக அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதன்படி, கடந்த பிப்., 19ல் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து குடும்பங்களும் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, வருவாய்த்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற தாமதம் செய்து வந்தனர். பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த ஏப்., 17ல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி, நேற்று, துணை தாசில்தார் ராஜா, ஆர்.ஐ., கண்ணன், வி.ஏ.ஓ., தீபன்ராஜ் மற்றும் எலச்சிபாளையம் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.