ADDED : ஜூன் 20, 2024 06:42 AM
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் தேவாலயத்தில் வெள்ளி பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மல்லசமுத்திரத்தில், டாக்டர் சுப்ராயன் ரோடு பகுதியில், புனித ஆரோக்கிய மாதா தேவாலயம் உள்ளது.
செபாஸ்டியன் என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு வழக்கம்போல் தேவாலயத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும், நேற்று காலை, 7:00 மணிக்கு தேவாலயத்திற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 960 கிராம் மதிப்புள்ள வெள்ளிசொம்பு, வெள்ளி தட்டு மற்றும் உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது. அதுமட்டுமல்லாது, குற்றச்செயலை கண்டுபிடிக்காமல் இருக்க, 'சிசிடிவி' புட்டேஜையும் எடுத்து சென்றுள்ளனர். மதியம்பட்டி மரியமதலேன் பங்குதந்தை கிளமெண்ட்ராஜ், நிர்வாகி செபாஸ்டியன் ஆகியோர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.