/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிகொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி
ADDED : டிச 05, 2025 10:24 AM

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், தொடர் மழை நின்றதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லி மலை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலை வருகின்றனர். விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவர். அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவி, சந்தன பாறை அருவி, சீக்குப்பாறை காட்சி முனையம், தாவரவியல் பூங்கா, வாசலுார் பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வர்.
கொல்லிமலைக்கு வருவோர், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஆர்வம் காட்டுவர். கொல்லிமலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சீதோஷ்ண நிலை மாறி, இரவு நேரங்களில் கடும் குளிர் காற்று அடிக்கிறது. புயல் காரணமாக கடந்த வாரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் கொட்டியது.
இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. தொடர் மழையால், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் முழுவதும் பாசி படிந்து இருந்தது. தடுப்பு கம்பிகள் சேதமானது. அவற்றை சரி செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இப்பணிகள் தற்போது நிறைவடைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், கொல்லிமலைக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.


