Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மூன்று வாரங்களாக தொடரும் மழையால்... ஓயாத மீட்பு பணி!இரவு பகலென போராடும் பேரிடர் குழுவினர்

மூன்று வாரங்களாக தொடரும் மழையால்... ஓயாத மீட்பு பணி!இரவு பகலென போராடும் பேரிடர் குழுவினர்

மூன்று வாரங்களாக தொடரும் மழையால்... ஓயாத மீட்பு பணி!இரவு பகலென போராடும் பேரிடர் குழுவினர்

மூன்று வாரங்களாக தொடரும் மழையால்... ஓயாத மீட்பு பணி!இரவு பகலென போராடும் பேரிடர் குழுவினர்

ADDED : ஜூலை 31, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
ஊட்டி;நீலகிரியில் கடந்த மூன்று வாரங்களாக பலத்த காற்றுடன் பெய்யும் கன மழையால், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், இரவு பகல் பாராமல் மக்களுக்கான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஜூலை, 4ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாக கணக்கெடுப்பு படி மாவட்ட முழுவதும் கன மழை; பலத்த காற்றுக்கு இதுவரை, 240க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றியதாக தெரிவித்துள்ளனர். மழைக்கு கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழை, இஞ்சி உள்ளிட்ட மலைப்பயிர்கள் அதிகளவில் சேதமாகியுள்ளன. பக்கவாட்டு சுவர் இடிந்து, 105 வீடுகள்; 4 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளது.

குடியிருப்பு, பள்ளி மற்றும் சாலையோரங்களில் அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள் தரும் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு அகற்றும் பணியும் ஒருப்புறம் நடந்து வருகிறது. பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் அந்தந்த தாலுகாவில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓயாத மீட்பு பணி


பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழு கடந்த ஜூலை, 5ம் தேதி ஊட்டிக்கு வந்தனர். மழை பாதித்த பகுதிகளான, கூடலுார், பந்தலுாரில் முகாமிட்டு பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு, சாலையோரம் விழுந்த மரங்கள்,சேதமான குடியிருப்புகள் என, இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின், மழையின் தாக்கம் ஊட்டி மற்றும் குந்தாவில் அதிகரித்ததால் இங்கு வந்த பேரிடர் குழுவினர் நான்கு தாலுகாவில் தலா, 15 பேர் வீதம் நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பிங்கர்போஸ்ட் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

தகவல் கிடைத்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மரத்தை அறுத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால், காலை நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று காலை மழை; குளிர் அதிகரித்ததால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார்.

சேரங்கோட்டில் அதிகபட்ச மழை

நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, சேரங்கோடு, 22 செ.மீ., பந்தலூர், 20 செ.மீ., அவலாஞ்சி, 18 செ.மீ., அப்பர்பவானி, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. பிற இடங்களிலும், 40 முதல், 50 மி.மீ., வரை மழை பெய்துள்ளது. மழைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அணைகள், தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us