Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்டத்தில் கண்புரையால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு! பழங்குடி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

மாவட்டத்தில் கண்புரையால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு! பழங்குடி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

மாவட்டத்தில் கண்புரையால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு! பழங்குடி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

மாவட்டத்தில் கண்புரையால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு! பழங்குடி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி

UPDATED : டிச 04, 2025 02:49 PMADDED : டிச 04, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் கண்புரை நோயினால் பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டும், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் சூழல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களுக்கு கண்ணின் லென்ஸ் மறையும்போது, கண்புரை உருவாகிறது. இதனால், பார்வை தெளிவு இல்லாமல் இருப்பது; மங்கலான பார்வை; கண் கூசுதல்; இரவில் வாகனங்கள் ஓட்டுவதில் சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும், வயது முதிர்வு, கண்ணில் ஏற்படும் காயங்கள், கண்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, புகை பிடித்தல் மற்றும் மது பழக்கம் போன்ற காரணங்களால், கண்புரை நோய் அதிகளவில் ஏற்படுகிறது. ஆறு வகையான கண்புரை நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அறுவை சிகிச்சை மூலம் இதனை சரிப்படுத்தலாம்.

ஆண்டுக்கு 3,200 பேர் பாதிப்பு தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் உட்பட, 3,200 பேர் கண்புரைநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவர்களுக்கு, தேசிய பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கிராமப்புறங்களில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை தேர்வு செய்து அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

அதில், அதிக நோயாளிகள் உள்ள, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி நோயாளிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு நிதியில், 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தேசிய பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கூடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை மைய கட்டடம் கட்டப்பட்டது.

சான்றிதழ் பெறாததால் சிக்கல் ஆனால், அறுவை சிகிச்சை அரங்கிற்கான தர சான்றிதழ் பெறாததாலும், போதிய உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்காததாலும், இதனை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது, ஒரு கண் டாக்டர் மட்டும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பந்தலுாரில் சமீபத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், 100 பேர் கண்புரை பாதிப்பால் பார்வையை இழந்து வருவது தெரிய வந்துள்ளது.

அதில், வாரத்தில், 20 பேர் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நிலையில், பிற நோயாளிகளுக்கு முழுமையாக மற்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதே நிலை தான் நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர்கிறது.

இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும், 3,200 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டாலும், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் அதிக மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கூடலுார் கண் சிகிச்சை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

உடனடி சிகிச்சை அவசியம்

ஓய்வு பெற்ற கண் மருத்துவர் அமராவதி கூறுகையில்,''பொதுவாக, 50 வயதிற்கு மேல் கண்புரை நோய் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை அளவு கூடுதல், பல்வேறு நோய்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்தாலும், இந்த பாதிப்பு ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் பகுதியில் உள்ள பழங்குடிகள்; தோட்ட தொழிலாளர்கள் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய், 70 சதவீதம் இருக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தால் பயன் ஏற்படும். இதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us