சிறுத்தை மர்ம மரணம் வனத்துறை விசாரணை
சிறுத்தை மர்ம மரணம் வனத்துறை விசாரணை
சிறுத்தை மர்ம மரணம் வனத்துறை விசாரணை
ADDED : பிப் 11, 2024 01:05 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, அத்திச்சால் சாலை ஓரத்தில், நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனச்சரகர் அய்யனாருக்கு தகவல் கிடைத்தது.
வன குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனைக்காக சிறுத்தை, சேரம்பாடி வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டது. சிறுத்தை உயிரிழந்த பகுதியில் கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆய்வு செய்தார்.
முதுமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான, மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே எரியூட்டினர். உயிரிழந்தது 6 வயது ஆண் சிறுத்தை என்றும், சிறுத்தை முகத்தில் லேசான காயம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாகனம் மோதி இறந்ததா, வேட்டை முயற்சியில்இறந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் மர்மமாக உயிரிழப்பது தொடர்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கோத்தகிரி, பந்தலுார், கூடலுார் பகுதிகளில், ஐந்து சிறுத்தைகள் மர்மமாக உயிரிழந்துஉள்ளன.
அதே போல, குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்து உள்ளன. சுருக்கு வேலி, விஷம் வைத்து கொல்வது உள்ளிட்டவையே விலங்குகள் இறப்புக்கு பிரதான காரணமாக உள்ளது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க, வனத்துறை அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.